கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுவை கடற்கரையில் நேற்று மாலையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
புதுச்சேரி,
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் புதுவையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் கோடை விடுமுறைக்கு பின்னர் கடந்த 1–ந் தேதி திறக்க இருந்த பள்ளிகளின் விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 7–ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் நேற்று அதிக அளவில் வந்திருந்தனர். புதுவையில் நேற்றும் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இதனால் காலை முதல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. புதுவைக்கு சுற்றுலா வந்த பயணிகளும் விடுதி அறைகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
அலைமோதிய கூட்டம்வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சாலையோரம் விற்ற நுங்கு வாங்கி சாப்பிட்டனர். இளநீர், மோர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி வெயிலின் தாக்கத்தை போக்கிக்கொண்டனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. எனவே வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்த பொதுமக்களும், விடுதிகளின் உள்ளேயே இருந்த சுற்றுலா பயணிகளும் தங்கள் குடும்பத்தினருடன் வெளியே வந்தனர்.
அவர்கள் கடற்கரை சாலைக்கு சென்று அங்குள்ள மணலில் அமர்ந்து காற்று வாங்கினர். இதனால் புதுவை கடற்கரை சாலை மற்றும் அதன் அருகில் உள்ள பாரதி பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சண்டே பஜார்இதேபோல் சண்டே பஜாரிலும் மக்கள் கூட்டம் நேற்று வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.