பணி நிரந்தரம் செய்யக்கோரி சேலத்தில் கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
சேலம்,
கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க மைய கவுன்சில் மாநில துணைத்தலைவர் சந்திரமோகன் உள்பட சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரியும் கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கோ–ஆப்டெக்ஸ் மூலம் நடத்தப்படும் முகாம் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சமவேலை, சமஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் கோ–ஆப்டெக்சில் துணி வாங்கியதில் ரூ.35 கோடி நிலுவை உள்ளது. அதை பெற்றுத்தர தமிழக முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் பணியாளர் சீருடை வாங்கியதில் ரூ.15 லட்சம் பாக்கி உள்ளது. அதை வழங்க போக்குவரத்துக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.