வல்லநாடு அருகே தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்


வல்லநாடு அருகே தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 5 Jun 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருடைய மகன் பெரிக் (வயது 21). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் பெரிக் தனது காரில், அதே பகுதியை சேர்ந்த தனது கல்லூரி நண்பர்களான கவுசிக் (21), ஜெகன் (21), அப்துல் (22), ரவி (11) ஆகியோருடன் பாளையங்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு கல்யாண வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டனர். காரை பெரிக் ஓட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடை அடுத்துள்ள பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் கார் நொறுங்கி சேதம் அடைந்தது.

வாலிபர் பலி

இந்த விபத்தில் பெரிக், கவுசிக், ஜெகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த பெரிக்கை மீட்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், கவுசிக், ஜெகன் ஆகியோரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பெரிக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அப்துல், ரவி ஆகியோர் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story