பேச்சிப்பாறை அணையை கடக்க படகில் பயணம் செய்யும் மலைவாழ் மக்கள்


பேச்சிப்பாறை அணையை கடக்க படகில் பயணம் செய்யும் மலைவாழ் மக்கள்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:15 AM IST (Updated: 5 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை கடக்க படகில் பயணம் செய்ய வேண்டிய நிலையில் மலைவாழ் கிராம மக்கள் உள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்றி மினி பஸ் இயக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை காயல் என அழைக்கிறார்கள். அதன் மறுகரை மலைப்பகுதியில் மாறாமலை, தோட்டமலை, களப்பாறை மலை, எட்டாங்குன்று, விலாமலை, முடவன் பொற்றை, தச்சமலை, வில்லுசாரிமலை ஆகிய 8 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் ஒட்டு மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான வீடுகள் ஓலையாலும், தகரத்தாலும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மலைவாழ் மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். மலைப்பகுதியில் உள்ள அந்த கிராமங்களுக்கு செல்ல தார்சாலை இல்லாததால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை.

பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளும், பொருட்கள் வாங்க கிராம மக்களும் படகு மூலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை கடந்து வர வேண்டிய பரிதாப நிலை நிலவுகிறது.

இதுபற்றி களப்பாறை மலையில் வசிக்கும் அய்யப்பன் கூறியதாவது:-

நான் பேச்சிப்பாறை கடம்ப மூட்டில் பூசாரியாக உள்ளேன். எங்கள் மலையில் 47 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு இன்னும் மின் வசதி கொடுக்கப்படவில்லை. நாங்கள் தென்னை, கம்பு, நல்லமிளகு போன்றவற்றை பயிரிட்டு உள்ளோம். எங்கள் விளை நிலங்களை யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நாசப்படுத்தி விடுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படகு பயணம்

வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் வாங்க நாங்கள் மலையில் இருந்து பேச்சிப்பாறை கடம்பமூடுக்கு வர, பேச்சிப்பாறை அணையை கடக்க படகை தான் நம்பி உள்ளோம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் படகில் வந்து ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வோம். 10 பேர் வரை படகில் பயணம் செய்தால் தலா ரூ.20 வாங்குவார்கள். ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் ரூ.50 வசூல் செய்கிறார்கள்.

எங்கள் பகுதிக்கு செல்வதற்காக 4 கிலோமீட்டர் வரை மட்டுமே தார்ச்சாலை உள்ளது. அதன்பிறகு வனப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் மண் சாலையாக உள்ளது. ஆகவே காயல் சாலையில் இருந்து அனைத்து மலைப்பகுதிக்கும் செல்ல தார்ச்சாலை அமைத்து மினி பஸ் இயக்க வேண்டும், என்றார்.

குடிநீர் வசதி

ஜெயந்தி: தச்சமலையில் வசிக்கிறேன். குடிநீருக்காக ஊற்று தோண்டி இருந்தோம். கோடையின் காரணமாக ஊற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் நாங்கள் காயலில் கிடக்கும் தண்ணீரை குடங்களில் எடுத்து சென்று பயன்படுத்தி வருகிறோம். எங்கள் குழந்தைகள் தொடக்க கல்வியை கற்பதற்காக தச்சமலையில் பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது.

அதற்கு மேல் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்க பேச்சிப்பாறை கடம்ப மூடில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும். அதற்காக மாணவ-மாணவிகள் தினமும் படகை பயன்படுத்த வேண்டியது உள்ளது. எங்களுக்கு குடிநீர் வசதி, தார்சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.

மினி பஸ் இயக்க வேண்டும்

படகோட்டி ஸ்ரீகுமார்: குமரி மாவட்ட கலெக்டராக நாகராஜன் இருந்த போது எங்கள் மலைக்கு குடும்பத்துடன் வந்தார். நாங்கள் சமைத்த உணவை சாப்பிட்டார். எங்களுக்கு மண் சாலை வசதியை செய்து கொடுத்து உள்ளார். அதை தார்ச்சாலையாக மாற்றினால் தான் வாகனங்கள் செல்ல முடியும் என்றார்.

ரதி: நாங்கள் வசிக்கும் எட்டாம் குன்றுக்கு காட்டுப்பன்றிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. அவற்றால் பயிர்கள் நாசமடைகின்றன. மேலும் எங்கள் வீட்டில் இருந்து அவசரமாக பேச்சிப்பாறை கடம்ப மூடுக்கு செல்ல ஆட்டோவுக்கு ரூ.150 செலவு ஆகிறது. நாங்கள் நடந்து செல்ல வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் நடக்க வேண்டி உள்ளது. எனவே மினி பஸ் இயக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.


Related Tags :
Next Story