ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்


ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 5 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வலியுறுத்தி தஞ்சையில் 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தை தி.மு.க. விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்.

உண்ணாவிரதத்தில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்கும் வகையில் காவிரி நீரை பெற்று தர வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழுவை மத்தியஅரசு அமைக்க வேண்டும். ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக வாழ்வாதாரத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல் படும் மத்தியஅரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக் கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் த.மா.கா. விவசாயிகள் சங்க தலைவர் புலியூர்நாக ராஜன், அவைத்தலைவர் புண்ணியமூர்த்தி, தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. முன்னாள் நகர செயலாளர் அடைக்கலம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மாலையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

கே.பி.ராமலிங்கம் பேட்டி

முன்னதாக தி.மு.க. விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் நிருபர் களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. மத்திய அரசை கண்டித்து மகாராஷ்ராவில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே சிதறிக்கிடக்கும் விவசாய சங்கங்கள் சேர்ந்து மாபெரும் போராட்டத்துக்கு ஒன்றிணைய வேண்டும். தமிழக அரசு விவசாயிகளை பற்றி கவலைப்படாததற்கு அரசியல் சூழ்நிலை தான் காரணம். இந்த நிலையை தொடர்ந்து தமிழக அரசு கடைபிடித்தால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது.

மத்திய அரசு மீத்தேன் திட்டத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கி விட்டது. மாநில அரசு மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளை கைது செய்கிறது. இதில் இருந்து மாநில அரசின் உண்மை நிலை வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அ.தி.மு.க. ஏற்கனவே 4 பிரிவாக உள்ளது. இந்த நிலையில் தொண்டர்களை சமாதானப்படுத்தும் வகையில் அரசு பணத்தை அவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு தான் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின்படி எவ்வளவு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது? எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

டன்னுக்கு ரூ.3,500 விலை

தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகையில், “கரும்பு விவசாயிகளுக்கு நிலுை-வைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்பு டன்னுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்”என்றார்.


Related Tags :
Next Story