பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2017 3:04 AM IST (Updated: 5 Jun 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொள்ளேகால்,

பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்திப்பூர் வனப்பகுதி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பந்திப்பூர் வனப்பகுதி புலிகள் பாதுகாப்பு சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் உலகப்புகழ் பெற்றதாகும். இங்கு யானைகள், சிறுத்தைகள், புலிகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன. பந்திப்பூர் வனப்பகுதி தமிழ்நாடு, கேரளா வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. குண்டலுபேட்டை–ஊட்டி, குண்டலுபேட்டை–கேரளா தேசிய நெடுஞ்சாலைகளும் இந்த வனப்பகுதியின் வழியாக தான் செல்கிறது. இதனால் தினமும் கேரளா, தமிழ்நாட்டில் இருந்து வரும் வாகனங்கள் பந்திப்பூர் வனப்பகுதி சாலை வழியாக தான் செல்கின்றன.

இந்த நிலையில் வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால், வனவிலங்குகள் அடிக்கடி உணவுதேடி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கும், வனப்பகுதி சாலைக்கும் வருகின்றன. அவ்வாறு வரும்போது வேகமாக வரும் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிரிகத்து வருகிறது.

வாகனங்கள் செல்ல தடை

வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் இரவு நேரங்களில் செல்வதை தடுக்க பந்திப்பூர் சரணாலயம் அருகே சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் குண்டலுபேட்டையில் இருந்து கேரளா, தமிழ்நாட்டுக்கு காய்கறிகள் ஏற்றி செல்லும் லாரிகள், சரக்கு வாகனங்களின் டிரைவர்கள் சோதனை சாவடியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களிடம் பணம் கொடுத்துவிட்டு, இரவு நேரங்களில் வேகமாக செல்வதாகவும், இதனால் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழப்பது அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர்கள் பற்றாக்குறை

இதுகுறித்து பந்திப்பூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பந்திப்பூர் வனப்பகுதி வழியாக கேரளா, தமிழ்நாட்டுக்கு காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், லாரி டிரைவர்கள் சோதனை சாவடியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களிடம் பணம் கொடுத்துவிட்டு தடையை மீறி இரவு நேரங்களில் வேகமாக செல்வதாகவும், அதனால் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. இந்த புகார் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே சோதனைச்சாவடியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வாகனங்கள் செல்வதை தடுக்கவும் வனஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் இரவு நேரத்தில் வனஊழியர்கள் ரோந்து செல்வது இல்லை. கூடிய விரைவில் ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டு பந்திப்பூர் சாலையில் ரோந்து பணிக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வனத்துறையினர் அலட்சியம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:–

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் செல்ல பிள்ளையாக வலம் வந்த ‘பிரின்ஸ்’ புலியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வைத்து கொன்றனர். மேலும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பந்திப்பூர் வனப்பகுதி சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரி கூறுகிறார்.

ஆனாலும் இரவு நேரங்களில் சோதனை சாவடி பணியில் ஈடுபடும் வன ஊழியர்களிடம் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளும், காய்கறிகள் ஏற்றி செல்லும் லாரி டிரைவர்களும் பணம் கொடுத்துவிட்டு வனப்பகுதி சாலையில் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. கடந்த வாரம் கூட வாகனம் மோதி ஆண்புலி ஒன்று செத்துள்ளது. வனத்துறையினரின் அலட்சியத்தால் பந்திப்பூர் வனப்பகுதியில் விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சமீபகாலமாக இரவு நேரங்களில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியிலும் ஈடுபடவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் ரோந்து பணி நடக்கவில்லை என்று அதிகாரி கூறியுள்ளார். இதனால் விரைவில் ஊழியர்களை நியமனம் செய்து, இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், மேலும் இரவு நேரங்களில் பணம் கொடுத்து வாகனங்கள் செல்லாதபடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story