நாசிக் அருகே சுங்கச்சாவடியில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
நாசிக் அருகே சுங்கச்சாவடியில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
நாசிக் அருகே சுங்கச்சாவடியில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மும்பை– ஆக்ரா நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீப்பிடித்த லாரிமும்பை– ஆக்ரா நெடுஞ்சாலையில் நாசிக் அருகே உள்ளது சாந்துவட்மங்களூர் சுங்கச்சாவடி. நேற்று நாசிக்கில் இருந்து துலே நோக்கி செல்லும் லாரி ஒன்று இந்த சுங்கச்சாவடிக்குள் நுழைந்தது. அந்த நேரத்தில் திடீரென லாரியின் டயர் வெடித்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். லாரி டிரைவர், கிளீனரும் கீழே இறங்கி ஓடினார்கள்.
தீப்பிடித்த லாரியில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்து உள்ளன. இதனால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
போக்குவரத்து பாதிப்புஇதுபற்றி தகவல் அறிந்ததும் மன்மாடு, மாலேகாவ், பிம்பல்காவ் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நாலாபுறமும் சுற்றி நின்றபடி லாரியில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க போராடினார்கள். ஆனால் அவர்களால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரி எரிந்து நாசமானது. மேலும் சுங்கச்சாவடியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தின் காரணமாக மும்பை– ஆக்ரா நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.