பள்ளிப்பட்டில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
பள்ளிப்பட்டில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
பள்ளிப்பட்டு,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வனதுர்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தினகர். இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா முனுசாமி நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கும் நேற்று காலை பள்ளிப்பட்டு சித்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திருமண பெண்ணுக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு புகார் வந்தது.
கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனா பள்ளிப்பட்டு வட்டார சமூக நல அலுவலர் காவேரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து சமூக நல அலுவலர் காவேரி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் புகார் செய்தார்.
தடுத்து நிறுத்தம்இதை தொடர்ந்து பள்ளிப்பட்டு சப்–இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் மற்றும் போலீசார் அந்த திருமண மண்டபத்திற்கு சமூக நல அலுவலர் காவேரியுடன் சென்றனர். விசாரணை செய்ததில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாக வில்லை என்பது தெரியவந்தது.
அப்போது திருமண வரவேற்பு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. போலீசார் வந்த தகவல் திருமண மண்டபத்தில் பரவியது.
அதற்குள் போலீசார் 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் உறவினர்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.