மத்திய பா.ஜனதா அரசு 3 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து விவாதம் நடத்த தயாரா?


மத்திய பா.ஜனதா அரசு 3 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து விவாதம் நடத்த தயாரா?
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 5 Jun 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பா.ஜனதா அரசு 3 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து விவாதம் நடத்த தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சவால்

ஆலந்தூர்,

மத்திய பா.ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து விவாதம் நடத்த தயாரா? என மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்து உள்ளார் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

சவாலை சந்திக்க தயார்

கருணாநிதி சட்டசபை வைர விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், இன்னொரு சுதந்திர போராட்டத்துக்கு தயாராகி விட்டோம் என கூறி உள்ளார். அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். சுதந்திரம் பறிபோனதே காங்கிரஸ் ஆட்சி செய்தபோதுதான். காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலையால் மு.க.ஸ்டாலினும் பாதிக்கப்பட்டவர்தான்.

அவசர நிலை இப்போது எங்கும் இல்லை. மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மதசார்பு உள்ள நாடாக மாறவில்லை. ஏதாவது ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?. விற்பனை சட்டத்தை ஒரு மதத்துக்கு எதிரான சட்டம் போல் தவறாக முன் நிறுத்துகின்றனர்.

விவாதம் நடத்த வரட்டும்

கருணாநிதி வைர விழாவில் அவரைப்பற்றி 2, 3 வைர வரிகள் கூட இல்லை. அது பிரதமர் மோடியை வைகிற(திட்டுகிற) விழாவாகத்தான் இருந்தது. வருங்காலத்தில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று இந்த கூட்டம் நடந்தது. ஊழல் ஒழிப்பு தினத்தில் ஊழல்தான் அதிகமாக ஒலித்துக்கொண்டு இருந்தது.

என்ன தான் முயற்சி செய்தாலும் மத்தியில் ராகுல் காந்தியும், மாநிலத்தில் மு.க.ஸ்டாலினும் ஆட்சிக்கு வர முடியாது. மத்திய பா.ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை? என கூறி உள்ளார்.

இந்த 3 ஆண்டுகள் என்ன செய்தோம்? என்பதை விவாதம் நடத்த வரட்டும். 3 ஆண்டுகள் நாங்கள் என்ன செய்தோம்?. பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட இவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை விவாதிப்போம்.

அசைக்க முடியாது

பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைத்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்களால் கூட்டணி அமைக்க முடியாது. அவர்கள் ஆட்சியில் மக்கள் வரி பணம் சுருட்டப்பட்டது. தற்போது மக்கள் வரி பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. மக்கள் பணத்தை மக்களுக்கே வழங்கி, ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே சாதனை தான்.

என்ன தான் பொய் உரைத்தாலும் மத்திய அரசை அசைக்க கூட முடியாது. மாநில அரசு பற்றி பேசாதது ஏன்?. வங்கிகள் மக்கள் மீது சுமை வைக்கக்கூடாது என மத்திய அரசு சொல்லி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story