நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மேகமலை அருவி


நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மேகமலை அருவி
x
தினத்தந்தி 6 Jun 2017 3:45 AM IST (Updated: 6 Jun 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளி இன்றி மேகமலை அருவி வெறிச்சோடியது.

கடமலைக்குண்டு,

நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளி இன்றி மேகமலை அருவி வெறிச்சோடியது.

மேகமலை அருவி

கடமலை–மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் நீர்வரத்து காணப்படும். இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்வார்கள். சுற்றுலா பயணிகள் வசதிக்காக பெண்கள் உடை மாற்றும் அறை, குளிப்பதற்கு பாதுகாப்பு வேலிகள், சாலை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வேலிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அதேபோல சாலையும் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் சேதமடைந்தது. இதனால் வாகனங்களை சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு முன்பே நிறுத்திவிட்டு அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள்

மேலும் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து குடித்து விட்டு அருவி அமைந்துள்ள பகுதியிலேயே தூக்கி வீசி சென்றனர். போலீஸ் மற்றும் வனத்துறையினரும் போதிய அளவில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. எனவே இதுபோன்ற காரணங்களால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து போனது.

அருவியில் அதிக நீர்வரத்து உள்ள நாட்களிலும் கூட வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. எனவே அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மேகமலை வனச்சரகம் சார்பில் கடந்த சில மாதங்களாக அருவி பகுதியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தடுப்பு வேலிகள்

அதன்படி முதற்கட்டமாக அருவியின் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் சீராக கீழே விழும் வகையில் பாறைகள் உடைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதேபோல அருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை, பாதுகாப்பாக குளிக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. சாலையில் ஏற்பட்டிருந்த சேதங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதேபோல வாகன சோதனை செய்யும் இடத்தில் இருந்து அருவிக்கு செல்ல மலை வழியாக புதிய வழித்தடம் அமைக்கப்பட்டது.

சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையின் இடையே வனப்பகுதியை கண்காணிக்க தீத்தடுப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பாதை வழியாக நடந்து செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்த தீத்தடுப்பு கோபுரத்தில் ஏறி அடர்ந்த வனப்பகுதியை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த பணிகளை தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது.

வருகை குறைந்தது

கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்தனர். தற்போது அருவிக்கு செல்லும் சாலையில் வனத்துறையினர் நின்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் மதுபாட்டில்கள் எடுத்து வந்தால் அதனை பறிமுதல் செய்து கடுமையான எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பைகள், ஷாம்பு உள்ளிட்டவற்றையும் அனுமதிப்பதில்லை. தற்போது மேகமலை வனப்பகுதியில் மழை இல்லாததால் அருவியில் நீர்வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் அருவிப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் அருவிக்கு செல்லும் சாலை மட்டும் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே அடுத்து மழை பெய்து நீர்வரத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அருவிக்கு புதிய தார்சாலை அமைத்தால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story