குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Jun 2017 3:45 AM IST (Updated: 6 Jun 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திண்டுக்கல்,

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நவாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்தனர். குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், சிலரை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊரில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. கடந்த ஒரு மாதமாக குடிக்க கூட தண்ணீர் இன்றி கடும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்தும் பலனில்லை. எனவே, எங்கள் ஊர் வழியாக ஒட்டன்சத்திரத்துக்கு கொண்டு செல்லப்படும் காவிரி கூட்டுக்குடிநீரில் இருந்து எங்களுக்கு தண்ணீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

இதைத்தவிர, திண்டுக்கல் வி.எம்.ஆர். பட்டியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50 பேர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘நாங்கள் வசிக்கும் பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். தற்போது, நகர் பகுதியில் எங்கேயோ மூடப்பட்ட மதுக்கடையை எங்கள் பகுதியில் திறக்க முயற்சிக்கிறார்கள். இதனால் குழந்தைகள், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, எங்கள் பகுதியில் மதுக்கடையை திறக்க அனுமதிக்ககூடாது’ என தெரிவித்து இருந்தனர்.

இதே போல, பழனி அருகே பழைய ஆயக்குடி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘எங்கள் பகுதியில் மதுக்கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எங்கள் ஊரில் எந்த பகுதியிலும் மதுக்கடையை திறக்க கூடாது’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் உத்தரவு

சாலை ஓரம் காலணி தைக்கும் தொழிலாளர்கள் சிலர் கோரிக்கை பேனரை பிடித்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில், ‘மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பஸ் நிலையம் அருகே எங்களுக்கென தனியாக கட்டிடம் கட்டி தர வேண்டும். எங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை மானிய அளவில் அரசு வழங்க வேண்டும். அரசு நிலங்களில் எங்களுக்கு இடம் ஒதுக்கி வீடு கட்டி தரவேண்டும்’ என தெரிவித்து இருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்


Next Story