சின்னாளபட்டி பகுதிகளில் கடும் வறட்சி: குடிநீர் பிடிக்க காத்திருக்கும் பொதுமக்கள்
சின்னாளபட்டி பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் பிடிப்பதற்காக பொதுமக்கள் குடங்களுடன் காத்திருக்கின்றனர்.
சின்னாளபட்டி,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதனை சமாளிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
இதுதவிர விவசாயமும் பொய்த்து போனதால் வேலையின்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக சிறுமலை அடிவார பகுதிகளான வெள்ளோடு, செட்டியப்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை ஆகிய கிராம ஊராட்சிகளில் உள்ள 100–க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குடங்களுடன் காத்திருப்புஇதில் ஊராட்சி பகுதிகளில் 30 நாட்களுக்கு ஒரு முறையும், சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமானதாக இல்லை.
இதனால் குடங்களுடன் பொதுமக்கள் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக காத்திருக்கின்றனர். சில நேரங்களில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக வீண் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தண்ணீர் பிடிப்பதற்கே காத்து கிடப்பதால் வேலைக்கு கூட செல்ல முடிவதில்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.
நடவடிக்கைமேலும் தண்ணீரை தேடி பொதுமக்கள் தோட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். அத்துடன் லாரிகளில் கொண்டு வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5–க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுதவிர வால்வு பகுதியில் வெளியேறும் சிறிதளவு தண்ணீரை பிடிப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒருநாள் முழுவதும் தண்ணீர் பிடிப்பதிலேயே பொழுது போகி விடுகிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி சின்னாளபட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.