கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில் தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்
கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில் தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் கலெக்டர் ஹரிகரன் தகவல்
கோவை,
கோவை மாவட்டத்தில் குளங்களில் தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை வழங்கும் பணி குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக முதல்– அமைச்சரின் உத்தரவுபடி கோவை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் 246 குளங்களில் தூர்வாரும் பணி மற்றும் இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். தாலுகா அலுவகத்தில் விவசாயிகள் சிட்டாவுடன் விண்ணப்பித்து, வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வண்டல் மண் எடுக்க உத்தரவு வழங்க வேண்டும். விவசாயிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நஞ்சை நிலம் ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் மண்ணும், புஞ்சை நிலம் ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் அளவுக்கும் மண் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர், அல்லது 10 டிராக்டர் லோடு மண்ணும், மண்பாண்டங்கள் தயாரித்தலுக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு மண்ணும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு குளங்கள் தூர்வாருவதன் மூலம் குளங்களை ஆழப்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு பயன்படுத்துவதற்கான உரமண்ணும் விலையில்லாமல் கிடைக்கிறது. மேலும், மழைக்காலங்களில் போதிய அளவு நீர் தேக்கிக்கொள்ள முடியும்.
இதன்மூலம் எதிர்க்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது மட்டுமின்றி விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாய பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். கோவை மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.