எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்


எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வண்டலூர்,

தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் சாவு

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ள தட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி அமுல்(வயது 45). இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்து உள்ளது. இதனால் அவரை கடந்த 31–ந் தேதி கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர்.

அங்கு உள்ள மருத்துவர்கள் அமுலுவை பரிசோதனை செய்து விட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் கூறி உள்ளனர். இதற்கு உறவினர்கள் ஒப்புதல் அளித்த பிறகு அமுலுவுக்கு மருத்துவர்கள் கடந்த 3–ந் தேதி சிறுநீரகத்தில் இருந்த கல்லை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்றினார்கள்.

மறுநாள் அவரை சாதாரண வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றி உள்ளனர். அதன் பின்னர் அமுலு, மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தவறான சிகிச்சை

இதனை அறிந்த அமுலுவின் உறவினர்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்றுமுன்தினம் இரவு எஸ்.ஆர்.எம். மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ்(பொறுப்பு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உறவினர்கள் கூறும்போது, ‘‘அமுலுவுக்கு தவறான சிகிச்சை அளித்து உள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தொடர்ந்து அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவர்களிடம் நாங்கள் கூறிய போது உரிய சிகிச்சை அளிக்கவில்லை. இதனால்தான் அமுலு பரிதாபமாக இறந்து விட்டார். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

2–வது நாளாக ஆர்ப்பாட்டம்

போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் ஏற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள், நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2–வது நாளாக நேற்று காலையும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையில் ஏராளமான போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர்.

போலீசில் புகார்

இதையடுத்து எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இருந்த அமுலுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு அமுலு எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் அமுலுவின் கணவர் ராமலிங்கம், மறைமலைநகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்துவிட்டார். எனவே மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story