குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
முற்றுகைதிருக்கோவிலூர் தாலுகா டி.புதுப்பாளையம் கிராம தைலாபுரம் தெருவை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராமமக்கள் கூறுகையில், எங்கள் தெருவில் சிறிய அளவிலான குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் வருவதற்காக இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் சிலர் திருட்டுத்தனமாக மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதனால் குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் தலையிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுதிநேர ரேஷன் கடைமேலும் எங்கள் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சரிவர பொருட்கள் வினியோகிப்பதில்லை. எனவே எனவே எங்கள் தெருவுக்கு என்று தனியாக பகுதி நேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுபோல் எங்கள் பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
இதனை கேட்டறிந்த போலீசார், இந்த கோரிக்கைகள் குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.