நெல்லிக்குப்பம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
நெல்லிக்குப்பம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ரெட்டிச்சாவடி,
நெல்லிக்குப்பம் அருகே சிலம்பிநாதன் பேட்டை. கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு இடம் தேர்வு செய்து டாஸ்மாக் கடை அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிலம்பிநாதன்பேட்டை அருகே உள்ள சாத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் நேற்று சிலம்பிநாதன்பேட்டையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க உள்ள இடம் முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாத்தப்பட்டு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களிடம் போலீசார், டாஸ்மாக் கடை உங்கள் பகுதியில் அமைக்கப் படவில்லை. சிலம்பிநாதன்பேட்டையில் தான் அமைக்கப்பட உள்ளது.
பிரச்சினை ஏற்படும்இதற்கு நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர்கள் எங்கள் கிராமத்து பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் புதிதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை வழியாகத்தான் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வருவபவர்களால் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். எனவே சிலம்பிநாதன் பேட்டையில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று கூறினர். இதையடுத்து போலீசார், உங்களது கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தனர். அதை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.