குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Jun 2017 3:17 AM IST (Updated: 6 Jun 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 12 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 175 மனுக்களும் என மொத்தம் 187 மனுக்கள் பெறப் பட்டன.

இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் நாகை மாவட்டம், பனங்குடி ஊராட்சி, மேலவாஞ்சூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் வேண்டியும், கொட்டாரக்குடி, நல்லுக்குடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சண்முகசுந்தரம் என்பவரது வீடு தீவிபத்தால் சேதமடைந்ததையொட்டி, நிவாரண தொகை வேண்டியும் மனு அளித்தனர். அவர்களது மனு உடனே பரிசீலிக்கப்பட்டு, சுந்தரமூர்த்திக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,000 மாத ஓய்வூதியம் வழங்கும் ஆணையினையும், மாற்றுத்திறனாளி சண்முகசுந்தரத்துக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கு இலவச பஸ்பாஸ், 4 பேருக்கு ரூ.22 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story