கவர்னர் மாளிகையில் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பவராக மட்டும் இருக்க முடியாது


கவர்னர் மாளிகையில் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பவராக மட்டும் இருக்க முடியாது
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகையில் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பவராக மட்டும் இருக்க முடியாது நாராயணசாமிக்கு, கிரண்பெடி பதிலடி

புதுச்சேரி,

கவர்னர் மாளிகையில் கிடைக்கும் சலுகைகளை மட்டும் அனுபவிப்பவராக இருக்க முடியாது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுத்துள்ளார்.

மோதல்

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. அரசின் திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுவதாகவும், வளர்ச்சியை தடுப்பதாகவும் அமைச்சர்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் கவர்னர் கிரண்பெடி தான் விதிமுறைப்படிதான் செயல்படுவதாகவும் கூறிவந்தார்.

இதற்கிடையே கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் கவர்னருக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரியிடம் புகார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர டெல்லிக்கு சென்று யாரும் கவர்னர் தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை.

உச்சகட்டம்

இதன்பின் இந்த பிரச்சினை சிறிது நாள் அமைதியாக இருந்தது. இப்போது முதுகலை மருத்துவ பட்டமேற்படிப்பு வி‌ஷயத்தில் கவர்னர்–அமைச்சரவை இடையேயான மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அரசு இடஒதுக்கீடாக பெறப்பட்ட இடங்களை தனியாருக்கு கொடுத்துவிட்டதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டினார்.

மேலும் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு நடத்தும் சென்டாக் அலுவலகத்துக்கு கவர்னரே நேரில் சென்று ஆய்வு நடத்தி மீண்டும் சென்டாக் கலந்தாய்வினை நடத்த செய்தார். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சினையை எம்.எல்.ஏ.க்கள் எழுப்பியபோது கவர்னரின் நடவடிக்கை விதிமுறை மீறல் என்றும், அவர் அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஊழல்வாதிகள் என்று கூறியிருப்பதாகவும் முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். அவர் எல்லை மீறி செயல்படுவதாகவும், அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

கவர்னர் பதிலடி

முதல்–அமைச்சர் நாராயணசாமியின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் தற்போது என்ன விரும்புகிறார்? நான் ரப்பர் ஸ்டாம்புபோல செயல்பட வேண்டுமா? சிறந்த நிர்வாகியாக இருக்கவேண்டுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி? பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் தவறுகள் நடக்க அனுமதிக்கப்படுகிறது. எந்த விளக்கமும் பெறாமல் கோப்புகளுக்கு அனுமதி தரவேண்டுமா?

சுயலாபத்துக்காக தங்கள் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப வேண்டியவர்களை பொறுப்புகளில் நியமிப்பதுதான் பணியா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்காவிட்டாலும் திடீரென கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கவேண்டுமா? இதற்காக கடன் வாங்கி செலவழிக்கவேண்டுமா?

சலுகைகளை அனுபவிப்பவராக...

தகுதியும், செயல்திறனும் இல்லாத அதிகாரிகளுக்கு பணியிடங்கள் இல்லாத நிலையிலும் பதவி உயர்வு தரவேண்டுமா? தைரியமாக, நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமா? எதையும் பார்க்காமல், எதையும் பேசாமல், வெறும் பார்வையாளராக கவர்னர் மாளிகையில் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பவராக கவர்னர் இருக்க வேண்டுமா?

மக்களை சந்திக்காமல், அதிகாரிகளை கேள்வி கேட்காமல் தனித்து இருக்கவேண்டுமா? ஆட்சியாளர்களை கூறுவதை பேசாமல் செயல்படுத்த வேண்டுமா? இதற்காக முதல்–அமைச்சரிடம் இருந்த பல கடிதங்கள் வந்துள்ளன. முதல்–அமைச்சருக்கு என்ன வேண்டும் என்றால் ஏற்கனவே பெற்ற நிதியை முறையாக செலவழிக்காத நிலையில் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி கிடைக்கவேண்டும்.

என்னதான் வேண்டும்?

வருவாய் ஈட்டும் சுற்றுலாத்துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது. இதுதான் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயல்படுவது என்பது? புதுச்சேரி நிர்வாகத்தில் நிலவும் தேக்க நிலையை சீரமைக்க ஒருவர் (கவர்னர்) உள்ளார், அவரது உதவியை பெறலாம் என்ற உண்மையை உணராமல் உள்ளனர்.

நான் மாநிலத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நல்ல நிர்வாகத்துக்கு உதவி புரியவும், அரசின் சக்தியை பலப்படுத்துவதாகவும் உள்ளேன் என்பதை அவர்கள் அறியவில்லை. இதனால் முதல்–அமைச்சருக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

நீதியை எதிர்நோக்கி...

யூனியன் பிரதேச சட்டத்தின்படி கவர்னர், முதல்–அமைச்சர் ஆகிய இருவருக்கும் பொறுப்புகளும், கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் சூழ்நிலையை அவர் எதிர்கொள்ள தயாராக இல்லை. பொதுமக்களும், மாணவர்களும் நீதியை எதிர்நோக்கி உள்ளனர்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி மாணவர்சேர்க்கையை எதிர்நோக்கி கதறலுடன் காத்துள்ளனர். யார் அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்ப்பது? நீதிமன்றங்கள்தானா? நாள்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கும் கவர்னர் மாளிகைதான் அவர்களது கடைசி நம்பிக்கையாக உள்ளது.

பார்வையாளர்களால்...

புதுவை மாநிலத்துக்கு சிறந்த நிர்வாகம், ஒருங்கிணைப்பு, நேர்மை, நீதி தேவைப்படுகிறது? இது எவ்வாறு கிடைக்கும்? யார் இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்? வெறும் பார்வையாளர்களால் இதை செய்ய முடியாது. புதுவை மக்களுக்காக இதயம் துடிப்பவரால் மட்டுமே முடியும். சுயநலமின்றி பணிபுரியும் ஒருவரால்தான் முடியும். பதவிகளுக்கு முன்பு மக்களின் நலனை முன்னிறுத்துபவரால் மட்டும்தான் முடியும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.


Next Story