பி.எட். ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வுக்கான கேள்வித்தாள் சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு


பி.எட். ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வுக்கான கேள்வித்தாள் சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 5:08 AM IST (Updated: 6 Jun 2017 5:08 AM IST)
t-max-icont-min-icon

பி.எட். ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வுக்கான கேள்வித்தாள் சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மந்திரி பசவராஜ் ராயரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பி.எட். ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்புக்கான 2-ம் பருவ தேர்வு நேற்று தொடங்கியது. அந்த தேர்வுக்கான கேள்வித்தாள் புகைப்படம் கலபுரகியில் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. அது மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கலபுரகி பல்கலைக்கழக தேர்வாணைய அதிகாரிகள் கூறுகையில், “கேள்வித்தாள், தேர்வு தொடங்கி 1 மணி நேரத்திற்கு பிறகு அதாவது காலை 11.30 மணிக்கு ‘வாட்ஸ்அப்‘பில் வெளியானது. கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை. தேர்வு அறைக்குள் சென்ற மாணவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கேள்வித்தாள் ஒரு பக்கம் மட்டும் புகைப்படமாக பரவியது. இதுபற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். சில விஷமிகள் இதை வெளியிட்டுள்ளனர். தவறு செய்தவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம். இதுபோன்ற வதந்திகளை கண்டு மாணவர்கள் பயப்பட தேவை இல்லை“ என்றார்.

விசாரணை நடத்தும்படி...

இதுகுறித்து உயர்கல்வித்துறை மந்திரி பசவராஜ் ராயரெட்டி கூறுகையில், “கேள்வித்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்தும்படி கலபுரகி பல்கலைக்கழக தேர்வாணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்“ என்றார். 

Next Story