சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு உதவ வேண்டும் சித்தராமையா வேண்டுகோள்
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு உதவ வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பெங்களூரு ஜி.கே.வி.கே. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பொதுமக்கள் தங்களின் உரிமைகள் குறித்து பேசுவதுடன், தங்களின் பொறுப்பு மற்றும் கடமை குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நகர்மயமாதல் அதிகரித்து வருவதால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீரை ஏரிகளில் விடுவதால் பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகள் அசுத்தம் அடைந்துள்ளன. அதில் நச்சு நுரை ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பசுமை சூழலை...
தூய்மையை பராமரிக்க குப்பை கழிவுகளை தரம் பிரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும் அரசு பல்வேறு சட்ட-திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இவற்றை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசின் திட்டங்களை சரியாக செயல்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு உதவ வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். பள்ளிகளில் பசுமை சூழலை ஏற்படுத்த வேண்டும்.
தூய்மை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் குழந்தைகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நான் படிக்கும்போது ஏரிகளில் இருந்து நீர் எடுத்து வந்து, மரக்கன்றை நட்டு வளர்த்தேன். அரசு சார்பில் கடந்த ஆண்டு 8 கோடி மரக்கன்றுகளும், நடப்பாண்டில் 6 கோடி மரக்கன்றுகளும் நட்டுள்ளோம். ஆனால் வனப்பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அப்படி என்றால் நடும் மரக்கன்றுகள் என்ன ஆகிறது என்று தெரியவில்லை.
கால்வாய்களை ஆக்கிரமித்து...
பெங்களூரு உள்பட சில நகரங்களில் ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதனால் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
விழாவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சேவையாற்றி வருகிறவர்களுக்கு சித்தராமையா விருது வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் கர்நாடக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ரமாநாத்ராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story