கர்நாடக சட்டசபையில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்


கர்நாடக சட்டசபையில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Jun 2017 5:14 AM IST (Updated: 6 Jun 2017 5:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் சபாநாயகர் கே.பி.கோலிவாட் தலைமையில் நேற்று நடந்தது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பர்வதம்மா ராஜ் குமாருக்கு சித்தராமையா புகழாரம் சூட்டினார்.

இரங்கல் தீர்மானம்

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் 5-ந் தேதி தொடங்கும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய கூட்டத்தில், சபாநாயகர் கே.பி.கோலிவாட், முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

மேல்-சபை உறுப்பினர் விமலா கவுடா, சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் என்.வி.பட்டீல், தொட்டமேடி ஞானதேவா, அஸ்வத் நாராயணரெட்டி, கே.மாதேகவுடா, கலூதி ராமப்பா மேலப்பா, சுபாஷ் சங்கரஷெட்டி பட்டீல், காந்தி பவன் தலைவர் காந்தியவாதி சீனிவாசய்யா, பிரபல எழுத்தாளர் கேசவமூர்த்தி, பத்திரிகையாளர் கருடனகிரி நாகராஜ், சினிமா தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார் ஆகிய 11 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானம் மீது முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

உந்துசக்தியாக இருந்தார்

காந்தியவாதி சீனிவாசய்யா, மகாத்மா காந்தியின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வந்தார். அவர் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். காந்தியின் கொள்கை, கோட்பாடுகளை பரப்ப மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். கடைசி வரை தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்குமாறு எனக்கு அவர் அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பை ஏற்று நான் தவறாமல் அந்த விழாவில் கலந்து கொண்டேன். அவர் வாழ்ந்துவிட்டு சென்ற வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதே போல் பர்வதம்மா ராஜ்குமார், ஒரு பெண்ணாக தனது கணவர் நடிகர் ராஜ்குமாரின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்துள்ளார்.

ராஜ்குமாரின் வெற்றியில் பர்வதம்மாவுக்கு பங்கு உள்ளது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருக்கிறார் என்று சொல்வார்கள். அதற்கு பர்வதம்மா ஒரு உதாரணமாக திகழ்ந்துள்ளார். ராஜ்குமாருக்கு பர்வதம்மா முதுகெலும்பாக திகழ்ந்தார். அவர் கன்னட சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து 80-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அவர் தனது படங்களில் பல பேரை அறிமுகம் செய்து, அவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்தார்.

மேல்-சபை உறுப்பினர் விமலா கவுடா திடீரென மறைந்துள்ளார். அவர் மேல்-சபை உறுப்பினராக 3 முறை பணியாற்றியுள்ளார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக பல முறை மேல்-சபையில் குரல் எழுப்பினார். முன்னாள் உறுப்பினர்கள் உள்பட 11 பேருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவர்களுடைய ஆன்மாக்கள் அமைதி பெற வேண்டுகிறேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

ஒரு நிமிடம் மவுன அஞ்சலி

அதைத்தொடர்ந்து, சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ஜனதா தளம்(எஸ்) துணைத்தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா உறுப்பினர்கள் செலுவராயசாமி, சித்துநாமேகவுடா, சதீஸ்ரெட்டி உள்பட பலரும் பேசினர். அவர்கள் அனைவருமே பர்வதம்மா ராஜ்குமாரை பற்றி பேசி புகழாரம் சூட்டினர்.

அதைத்தொடர்ந்த அந்த இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பிறகு மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சபை 1 மணி நேரம் தள்ளிவைப்படுவதாக சபாநாயகர் கே.பி.கோலிவாட் கூறினார்.

மேல்-சபை ஒத்திவைப்பு

அதே போல் கர்நாடக மேல்-சபையிலும் உறுப்பினர் விமலா கவுடா மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக மேலவை தலைவர் சங்கரமூர்த்தி அறிவித்தார். 

Next Story