மராட்டியத்தில் விவசாயிகள் போராட்டம் நீடிப்பு முழு அடைப்பில் வன்முறை பால்வேன் எரிப்பு


மராட்டியத்தில் விவசாயிகள் போராட்டம் நீடிப்பு முழு அடைப்பில் வன்முறை பால்வேன் எரிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 5:27 AM IST (Updated: 6 Jun 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடனை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

மும்பை,

வறட்சி, பருவம் தவறிய மழையால் இழப்பு காரணமாக விவசாயத்திற்கு வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி மராட்டியத்தில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

5-வது நாளாக நீடிப்பு

மாநில அரசுக்கு எதிராக கடந்த 1-ந்தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் காய்கறிகள், பழங்கள் சாலையில் வீசி வாகனங்களை ஏறவிட்டு நசுக்கப்பட்டன. பால் வண்டிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டு சாலைகளிலும், வீதிகளிலும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்பட்டது.

முக்கியமாக நகர பகுதிகளுக்கு காய்கறி மற்றும் பால் வரத்தை தடுத்து நிறுத்தினார்கள். காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மார்க்கெட்டுகள் வெறிச்சோடின. இதனால் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் காய்கறிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், தங்களது காலவரையற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக விவசாய சங்கங்கள் நேற்று மும்பையை தவிர்த்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தன.

முழு அடைப்பு

இதன்படி நேற்று மும்பையை தவிர மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. விவசாயிகள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநிலத்தில் முழு அடைப்பு நடந்த பெரும்பாலான இடங்களிலும் நேற்று காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மார்க்கெட்டுகள் காய்கறிகள் வரத்து இன்றியும், மக்கள் வராமலும் வெறிச்சோடின. ரெயில், பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

முழு அடைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.

பஸ்கள் மீது கல்வீச்சு

சாங்கிலி, உஸ்மனாபாத் உள்ளிட்ட சில இடங்களில் அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

புனேயில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். யவத்மாலில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் நடுரோட்டில் டயர்களை போட்டு கொளுத்தினார்கள். அகமத்நகர் மாவட்டம் சங்கம்னர் பகுதியை அடுத்த கோலேவாடி மற்றும் நாந்தெட்டில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சாங்கிலியில் அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

தீ வைத்து எரிப்பு

பண்டாரா மற்றும் நாக்பூரில் சாலையில் வந்த காய்கறி மற்றும் பால் லாரிகள் நடுவழியில் வழிமறித்து நிறுத்தப்பட்டன. அப்போது விவசாயிகள் லாரியில் இருந்த காய்கறிகளை சாலையில் ஆவேசத்துடன் வீசி எறிந்தனர். மேலும் பால் சாலையில் திறந்து விடப்பட்டது.

ஷீரடியில் ராவ்பூரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த பால் வேனை சிறைபிடித்த போராட்டக்காரர்கள் அதை தீ வைத்து எரித்தார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. சாலீஸ்காவில் முதல்-மந்திரியின் உருவபொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக 70 பேர் மீது அங்குள்ள மெகுன்பாரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சாலை மறியல்

புல்தானாவில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தினார்கள். பண்டர்பூரில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று, அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோல பீட்டில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். நாசிக்கில் உள்ள மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டு பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு பஜனை செய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச்செய்தனர்.

இச்சல்கரஞ்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில், பயிர்க்கடன் பிரச்சினையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சிவசேனாவினரும் கட்சி கொடிகளுடன் கலந்துகொண்டனர்.

கோலாப்பூரில் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை சிவசேனாவினர் வலுக்கட்டாயமாக இழுத்து மூடச்செய்தனர். வட்காவ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட மறுத்த வியாபாரிகளுடன், ராஜூ ஷெட்டி எம்.பி. தலைமையிலான சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோலாப்பூர்

இருப்பினும், சோலாப்பூரில் ஏ.பி.எம்.சி. சந்தை திறந்து இருந்தது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வழக்கம்போல் கொண்டு வந்து விற்பனை செய்தனர். நவிமும்பையில், தினசரி 1,000 லாரிகளில் காய்கறிகள், பழங்கள் வருவது வழக்கம். நேற்று ஏறத்தாழ 450 லாரிகளில் பொருட்கள் வந்து இறங்கியதை காண முடிந்தது.

துலேயில் வேளாண் பொருட்களின் வரத்து சீரானது. நாசிக் மாவட்டம் சந்த்வாடு பகுதியில் மன்மடு- சந்த்வாட் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், நாசிக்- நிப்பாடு- சந்த்வாடு சாலையில் சில விவசாயிகள் மாட்டு வண்டியை கொண்டு வந்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

மாநிலத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Next Story