விவசாயிகள் போராட்டம் தொடரும் கிருஷ்ணகிரியில் அய்யாக்கண்ணு பேட்டி


விவசாயிகள் போராட்டம் தொடரும் கிருஷ்ணகிரியில் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 6 Jun 2017 10:02 AM IST (Updated: 6 Jun 2017 10:02 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

கிருஷ்ணகிரி,


கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

41 நாட்கள் போராட்டம்

வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது. விவசாயிகளின் கருகிய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகளுக்கு தற்போது வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியவில்லை.

தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்தால் விவசாயிகளை அடிமைகள் போல நடத்துகிறார்கள். 4-ம் தர குடிமக்களாக வாழ கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டெல்லியில் நாங்கள் 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம்.

சென்னையில் போராட்டம்

ஆனால் ஆளும் மத்திய அரசோ எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனும் வந்து எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறி சென்றார். எதுவும் பரிசீலிக்கப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணேகொல்புதூர் திட்டம், காவிரி குண்டாறு திட்டம் போன்றவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டோம் என கூறினார். ஆனால் தற்போது மேல்முறையீட்டுக்கு செல்கிறார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 32 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராட்டம் நடக்கிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 32 மாவட்ட விவசாயிகளும் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டம் தொடர் போராட்டமாக நடைபெறுகிறது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், வெற்றி கிடைக்கும் வரையில் விவசாயிகளின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டு விழா

முன்னதாக தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதுடெல்லியில் 41 நாட்கள் தமிழக விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய மாநில தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு பாராட்டு விழா மற்றும் கிருஷ்ணகிரி - தர்மபுரி மாவட்ட ஊழியர் கூட்டம் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள திருப்பதி கவுண்டர் அரங்கில் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். மாவட் பொதுச் செயலாளர் சண்முகம், துணை தலைவர்கள் காவேரி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஜெயவேலன், காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பிரசார குழு தலைவர் விஜய்காந்த் வரவேற்றார். இதில் மாநில துணை தலைவர் கிருஷ்ணன், பொதுச் செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர்கள் முருகன், தினேஷ், பொருளாளர் கார்த்திகேயன், பிரசார குழு தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி மாவட்ட தலைவர் முனிராஜ் நன்றி கூறினார்.

Next Story