எட்டிமரத்துப்பட்டியில் செயல்படும் மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் மனு


எட்டிமரத்துப்பட்டியில் செயல்படும் மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் மனு
x
தினத்தந்தி 6 Jun 2017 10:11 AM IST (Updated: 6 Jun 2017 10:11 AM IST)
t-max-icont-min-icon

எட்டிமரத்துப்பட்டியில் செயல்படும் மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் அந்த பகுதி பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து, குடிநீர், சாலை வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

தர்மபுரியை அடுத்த எட்டிமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் எட்டிமரத்துப்பட்டியில் செயல்படும் அரசு மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மன உளைச்சல்

அந்த மனுவில், தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிமரத்துப்பட்டியில் சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி பலமுறை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிறைந்த அந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பெண்கள் பெரிதும் பாதிப்பு அடைவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று உங்கரானஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, நல்லசேனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடை தொடர்ந்து செயல்படுவதால் அந்த பகுதியில் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை

இதேபோன்று என்.எஸ்.ரெட்டியூர், சாமிக்கவுண்டனூர், ஆவல்நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் என்.எஸ்.ரெட்டியூர் கிராம எல்லையில் மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இங்கு மதுக்கடையை திறந்தால் அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் தம்மணம்பட்டி, வெங்கட்டம்பட்டி, லளிகம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்த மதுக்கடை திறக்கும் முடிவை அரசு உடனே கைவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதனிடையே எட்டிமரத்துப்பட்டி மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story