தள்ளு வண்டியாக மாறிய பேரூராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
மானாமதுரையில் தள்ளு வண்டியாக மாறிய பேரூராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
மானாமதுரை,
மானாமதுரை பேரூராட்சியில் நேற்று பழுதான டிராக்டரை தள்ளியபடியே குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் சேகரித்ததால் பல இடங்களில் குப்பைகள் அள்ள முடியாமல் சுகாதார கேடு நிலவியது.
பழுதான வாகனங்கள்மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இவற்றில் தினசரி சேகரமாகும் குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் டிராக்டர் மற்றும் மினி வேன் மூலம் அள்ளி குப்பை கிடங்கில் சேகரித்து வருகின்றனர். மானாமதுரை பேரூராட்சியில் ஒரு துப்புரவு ஆய்வாளர், 2 மேஸ்திரிகள், 27 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நகர் முழுவதும் குப்பைகளை அள்ள 2 டிராக்டர்கள், ஒரு வேன், தள்ளு வண்டிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. இவற்றை உரிய முறையில் பராமரிக்காததால் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் சேதமடைந்ததுடன் பழுதடைந்துள்ளன. இதனால் இந்த வாகனங்கள் தள்ளு வண்டிகளாக இயக்கப்படுகின்றன.
தள்ளு வண்டிஇந்தநிலையில் நேற்று மானாமதுரை அன்பு நகர், அண்ணாமலை நகர், கல்குறிச்சி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்காக ஒரு டிராக்டரில் 5 ஊழியர்கள் வந்தனர். அப்போது திடீரென்று டிராக்டர் பழுதானதால், அதனை இயக்க முடியவில்லை. இதுகுறித்து அலுவலகத்திற்கு ஓட்டுனர் தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் டிராக்டரை குப்பைகளை அள்ளி கொண்டு அலுவலகம் கொண்டு வர உத்தரவிட்டனர். வேறு வழியின்றி ஊழியர்கள் டிராக்டரை தள்ளியபடியே நகர் முழுவதும் அலைந்து குப்பைகளை அள்ளியதுடன், டிராக்டரையும் தள்ளியபடியே வந்தனர். இதனால் பல வார்டுகளில் குப்பைகள் அள்ளாமல் அப்படியே விடப்பட்டன. இதனால் தெருக்களில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி சுகாதார கேடு நிலவியது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அந்த டிராக்டர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாகனங்களை சர்வீஸ் செய்ய வேண்டும். மானாமதுரையில் இருந்து மதுரைக்கு வாகனத்தை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் வாகனத்தை பராமரிக்க கொண்டு செல்லாமல் பேரூராட்சி பணியாளர்களே அவ்வப்போது சரி செய்து இயக்கியுள்ளனர். இதனால் டிராக்டர் பழுதாகிவிட்டதாக தெரிவித்தனர்.