கோவில்பட்டி அரசு அலுவலகங்களில் கலெக்டர் வெங்கடேஷ் திடீர் ஆய்வு
கோவில்பட்டியில் தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் ஆகிய 2 அரசு அலுவலகங்களில் நேற்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் ஆகிய 2 அரசு அலுவலகங்களில் நேற்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வுதூத்துக்குடி மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ் நேற்று முன்தினம் பொறுப்பு ஏற்றார். அவர் நேற்று காலை 11 மணி அளவில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு முன் அறிவிப்பு இன்றி சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். அங்கு பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் சுப்புலட்சுமி உள்ளிட்டவர்களிடம் கலெக்டர் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.
அப்போது, ‘அவர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மற்றும் பிரச்சினைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்து, தீர்வு காண வேண்டும். குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என்று அறிவுறுத்தினார்.
அடிப்படை வசதிகள்...பின்னர், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு பணியில் இருந்த உதவி கலெக்டர் அனிதா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்குள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் போதிய மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். கூடுதல் பஸ் நிலையம்– அண்ணா பஸ் நிலையம் இடையே இரவு நேரங்களில் பஸ் இயக்கப்படும்.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். கோவில்பட்டி– எட்டயபுரம் சாலை விரிவாக்க பணி விரைவாக நிறைவேற்றப்படும். அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு குடிநீர், இருக்கை வசதி ஏற்படுத்தப்படும், என்று கூறினார்.