ஊட்டி நகராட்சியின் முதல் கமி‌ஷனர் பிரிக்ஸ் நினைவுநாள் கடைபிடிப்பு


ஊட்டி நகராட்சியின் முதல் கமி‌ஷனர் பிரிக்ஸ் நினைவுநாள் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2017 4:00 AM IST (Updated: 7 Jun 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியின் முதல் கமி‌ஷனர் பிரிக்ஸ் நினைவுநாள் கடைபிடிப்பு கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி

ஊட்டி,

ஊட்டி நகராட்சி கமி‌ஷனராக கடந்த 1868–ம் ஆண்டு பிரிக்ஸ் என்பவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டார். இவர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டார். இவரது உடல் ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்டீபன் ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவுநாளை நினைவுகூரும் வகையில் நீலகிரி ஆவண காப்பக அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால், நீலகிரி ஓட்டல்கள் சங்க செயலாளர் முரளிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு ஊட்டி நகராட்சியின் முதல் கமி‌ஷனரான பிரிக்ஸ் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறியதாவது:–

ஊட்டி நகராட்சியின் முதல் கமி‌ஷனரான பிரிக்ஸ் தனது 4 ஆண்டு பணிகாலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார். ஊட்டி மலைக்குன்றுகளில் உள்ள குகை, மண் மூடி கிடந்த குளங்கள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார். அப்போது நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் குடியிருந்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. பின்னர் நாளடைவில் அவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

அவர் நீலகிரியின் குடிமக்களும் புதைபொருட்களும் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருந்தார். அதில், மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த படுகர், தோடர், கோத்தர், இருளர், குரும்பர் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள் குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்டத்தின் வரலாறை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்து கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story