கோவை சவுரிபாளையத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முற்றுகை


கோவை சவுரிபாளையத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jun 2017 3:30 AM IST (Updated: 7 Jun 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

கோவை சவுரிபாளையத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூடக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பொள்ளாச்சி,

கோவை சவுரிபாளையத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூடக்கோரி, நேற்று அந்த பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினார்கள்.

டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி அருகே சங்கம்பாளையத்தில் கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் சவுரிபாளையத்தில் செயல்பட்டு வரும் 2 மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனக்கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் (பொறுப்பு) விஜய சண்முகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

4 மதுக்கடைகள்

கோவை சவுரிபாளையத்தில் மொத்தம் 4 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மது எங்கள் பகுதிக்கு வேண்டாம். எனவே 4 கடைகளையும் மூடக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதையடுத்து கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் வரும் (கடை எண் 1653, 1688) 2 கடைகளை விரைவில் அகற்றுவதாக அதிகாரிகள் எழுத்து மூலம் உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளனர்.

மீதமுள்ள 2 மதுக்கடைகள் (எண் 1556, 1952) தெற்கு மாவட்டத்துக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே தாங்கள் மேற்கண்ட 2 மதுக்கடைகளையும் மூடி எங்களுக்கு உதவ வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலைந்து சென்றனர்

மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், இதில் ஒரு கடை மட்டும் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்டது. மற்றொரு கடை வடக்கு மாவட்ட எல்லையில் தான் உள்ளது. எனவே உங்கள் கோரிக்கை குறித்து வடக்கு மாவட்ட அலுவலர்களிடம் கலந்து பேசி ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்றார். அதிகாரியின் வாக்குறுதியை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story