கர்நாடக அரசு, விவசாய கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்
கர்நாடக அரசு, விவசாய கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தினார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு, விவசாய கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தினார்.
வறட்சி மீது விவாதம்கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் 2–வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. அதைத்தொடர்ந்து வறட்சி மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:–
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. 160 தாலுகாக்கள் வறட்சி பகுதி என்று மாநில அரசு அறிவித்துள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளில் எங்கள் கட்சியின் தலைவர் எடியூரப்பா தலைமையில் ஆய்வு பயணம் நடந்து வருகிறது. இதுபற்றி முதல்–மந்திரி சித்தராமையா, பா.ஜனதா தலைவர்கள் குடையுடன் சென்றால் நன்றாக இருக்கும் என்று கிண்டல் செய்தார். மாநிலத்தில் மழை பெய்து வருவதாக அவர் சொன்னார்.
குடிநீர் பிரச்சினை தாண்டவமாடுகிறதுஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்கிறது. மாநிலம் முழுவதும் மழை பெய்யவில்லை. கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினை தாண்டவமாடுகிறது. சித்தராமையாவின் சொந்த தொகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து அனைவரும் ஒட்டுமொத்தமாக வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதுபோன்று பல பகுதிகளில் மக்கள் வேலை தேடி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். இதை இந்த அரசால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?.
விவசாயிகளின், தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2,573 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 1,700 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே மாநில அரசு நிவாரண நிதி உதவியை வழங்கியுள்ளது. மீதமுள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண உதவி கிடைக்கவில்லை. தற்கொலை செய்து கொண்டவர்களில் 731 பேரின் குடும்பங்களின் மனுக்களை மாநில அரசு நிராகரித்துவிட்டது.
வட்டியை தள்ளுபடி செய்வதாக...அவர்கள் தனியாரிடம் கடன் வாங்கியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால் அவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகையை வழங்க இயலாது என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது. அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்க சித்தராமையா உடனடியாக உத்தரவிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனில் அசலை திருப்பி செலுத்தினால், வட்டியை தள்ளுபடி செய்வதாக சித்தராமையா அறிவித்தார்.
அசலை செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். அதனால் கர்நாடக அரசு விவசாய கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். நான் முதல்–மந்திரியாக இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான...மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.4,898 கோடி நிதி உதவியை வழங்கியுள்ளது. அந்த நிதியை கர்நாடக அரசு சரியாக பயன்படுத்தவில்லை. 14–வது நிதி ஆயோக் மூலம் கர்நாடகத்திற்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் சித்தராமையா எப்போதும் மத்திய அரசை விமர்சனம் செய்கிறார்.
மாநிலத்தில் பெரும்பாலான ஏரிகள் வறண்ட நிலையில் காட்சி அளிக்கின்றன. அவற்றில் தூர் வாரும் பணியை இந்த அரசு செய்யவில்லை. துங்கபத்ரா அணையில் 33 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் கொள்ளளவுக்கு மண் நிரம்பியுள்ளது. இதில் தூர் வாரும் பணிக்கு அரசு உலக அளவிலான டெண்டருக்கு அழைப்பு விட்டுள்ளது. இவ்வளவு மண்ணை எடுத்து எங்கே கொட்டுவது என்றும், இது சாத்தியம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தடுப்பணைகள் கட்ட வேண்டும்ஆனால் விவசாயிகள் ஒன்றிணைந்து ஆங்காங்கே நன்கொடை வசூலித்து 12 ஏக்கர் பரப்பளவுக்கு 3 அடி ஆழத்திற்கு மண்ணை எடுத்துள்ளனர். இதன் மூலம் 1 டி.எம்.சி. தண்ணீரை சேகரித்து வைக்க முடியும். இந்த ஒரு டி.எம்.சி. தண்ணீரை ஒரு தாலுகாவுக்கே பாசனத்திற்கு வழங்க முடியும். இது சாத்தியம் இல்லை என்று கூறியதை விவசாயிகள் சாத்தியப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த விவசாயிகளுக்கு மாநில அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும். தூர் வாரும் பணியில் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
காவிரி பிரச்சினையில் தண்ணீருக்காக நாமும், தமிழ்நாடும் சண்டை போட்டுக்கொள்கிறோம். ஆனால் தண்ணீரை சேகரிக்க அண்டை மாநில விவசாயிகள் கர்நாடக விவசாயிகளுடன் கைகோர்த்து செயல்படுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது ஆகும். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க அதிகளவில் தடுப்பணைகளை கட்ட வேண்டும்.
முறைகேடு நடந்துள்ளதுவறட்சி பாதித்த பகுதிகளில் 81 கோசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. அந்த கோசாலைகளை சென்று பார்த்தால், அங்கு தீவனம் உள்பட எந்த வசதியும் சரியாக இல்லை. வெறும் கோசாலைகளை திறந்து என்ன பயன்?. கோசாலைகளுக்கு தீவனங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும்.
கதக்கில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை சித்தராமையா கடந்த 4–ந் தேதி தொடங்கி வைத்தார். அங்கு நகரம் முழுமைக்கும் இந்த குடிநீர் கிடைக்கவில்லை. அரசு தவறான தகவல்களை சொல்லி மக்களை திசை திருப்புகிறது. மாநிலத்திற்கு குடிநீர் வழங்கும் மந்திரி எச்.கே.பட்டீலின் சொந்த ஊரான கதக்கில் 30 நாட்கள், 40 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் பேசினார்.