மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவோம்: கை ரேகையை பதிவு செய்து உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்


மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவோம்: கை ரேகையை பதிவு செய்து உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Jun 2017 3:00 AM IST (Updated: 7 Jun 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவோம் என கை ரேகையை பதிவு செய்து உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல்,

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவோம் என்று கை ரேகையை பதிவு செய்து பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர்.

கை ரேகை பதிவு

திண்டுக்கல் மாநகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, நகரை தூய்மையாக வைத்திருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், குப்பை சேகரிக்க வரும் துப்புரவு ஊழியர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

இதையொட்டி, திண்டுக்கல் 37–வது வார்டு பொன்சீனிவாசன்நகர், 25–வது வார்டு நரிப்பாறை ஆகிய இடங்களில் நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடந்தது. அப்போது, அங்குள்ள பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவோம் என்று உறுதி மொழி எடுத்தனர். இதற்காக அங்கு வைக்கப்பட்டு இருந்த போர்டில் தங்களின் உள்ளங்கை ரேகையை பதிவு செய்தனர்.

கடைபிடிக்க வேண்டும்

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வீடுகளில் சேரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறோம். இந்த பணி 48 வார்டுகளிலும் நடக்கிறது. மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். எனவே, நகரை தூய்மையாக பாதுகாக்க இதை எப்போதும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.

இரண்டு இடங்களில் நடந்த விழிப்புணர்வு முகாம்களில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களின் உள்ளங்கை ரேகைகளை பதிவு செய்து உறுதிமொழி எடுத்தனர். இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story