அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 7 Jun 2017 3:30 AM IST (Updated: 7 Jun 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம்,

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

விக்கிரவாண்டியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 2017–18–ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், அரசு பள்ளிகள் தரம் வாய்ந்த கல்வியையும், தகுதிமிக்க ஆசிரியர்களையும் கொண்டு நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து விட்டால் போதும்.

வசதிகள்

ஏழை எளிய மக்களின் நலன் கருதி மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசே சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. எனவே பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து பயனடைய வேண்டும் என்றார்.

விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி விக்கிரவாண்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இளங்கோ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ– மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story