மீஞ்சூர் அருகே குடிநீர் திருட்டு; இணைப்புகள் துண்டிப்பு
மீஞ்சூர் அருகே குடிநீர் திருட்டு தொடர்பாக இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ளது தத்தைமஞ்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில் வசிக்கும் 800–க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சீராக குடிநீர் வழங்கக்கோரி தத்தைமஞ்சி ஊராட்சியில் அடங்கிய சிருளப்பஞ்சேரி கிராம மக்கள் கடந்த மாதம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
இந்த குடிநீர் குழாய்களை மீஞ்சூர் ஒன்றிய கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஆணையாளர் கார்த்திகேயன், குடிநீர் திட்ட அதிகாரிகள் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்த போது திருட்டுத்தனமாக மின் மோட்டார்கள் உதவியுடன் 4 வீடுகளில் குடிநீரை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர். மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் போலீசில் புகார் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story