பேரம்பாக்கம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
பேரம்பாக்கம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 29–ந்தேதி வேலைக்கு சென்று விட்டு தனது சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் உளுந்தை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக பூந்தமல்லி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரங்கநாதன் படுகாயம் அடைந்தார்.
சாவு
இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரங்கநாதன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாபுரம் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் கிராமம் பாளையக்கார தெருவை சேர்ந்தவர் அம்சா ( 50). நுங்கு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் ஏனம்பாக்கத்தில் இருந்து பெரியபாளையம் பஜார் தெருவுக்கு சென்று வியாபாரம் செய்தார். பின்னர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். செங்காத்தாகுளம் கிராமத்தில் சாலை வளைவில் ஆட்டோ வந்தபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததது. இதனால் ஆட்டோ டிரைவரான பெரியபாளையம் தண்டுமா நகரை சேர்ந்த வெங்கடேசன் (36) திடீர் என்று பிரேக் பிடித்தார்.
இதில் கண் இமைக்கும் நேரத்தில் அம்சா ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தார். ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், அம்சாவை பெரியபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்சா நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story