மாதவரத்தில் பயங்கரம்: தங்கை கணவரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட பெண் அடித்துக்கொலை
மாதவரத்தில் தங்கை கணவரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட பெண் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தேடிவருகின்றனர்.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜார்ஜ்கென்னடி(வயது 44). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (38). இவர்களுக்கு ஜெனிதாமஸ் என்ற மகனும், ஜெயஜெனிபர் என்ற மகளும் உள்ளனர்.
அதே முகாமில் ஜார்ஜ்கென்னடியின் வீடு அருகே வசித்துவந்தவர் சுஜி (36). இவர் கணவரை பிரிந்து சுகீஷன், பபிஷா என்ற தனது குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்தார். அவர்களது வீடுகள் அருகருகே இருப்பதால் இரு குடும்பத்தினரும் நன்றாக பழகிவந்தனர்.
கள்ளத்தொடர்பு
இந்த பழக்கம் நாளடைவில் ஜார்ஜ்கென்னடிக்கும், சுஜிக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியது. அவர்கள் இருவரும் சென்னையில் ஓட்டல்கள், கடற்கரை என பல இடங்களில் ஜாலியாக சுற்றிவந்தனர். இதை அறிந்த ஸ்ரீதேவி, தனது கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ஜார்ஜ்கென்னடியின் ஏற்பாட்டில், சுஜி கடந்த 6 மாதங்களாக மாதவரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார். ஜார்ஜ்கென்னடி, சுஜிக்கு அந்த பகுதியில் ஒரு ஜெராக்ஸ் கடையும் வைத்துக் கொடுத்ததாக தெரிகிறது. இருவரும் மாதவரத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்திவந்தனர். ஜார்ஜ்கென்னடி தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் சுஜியிடம் கொடுத்துவந்தார்.
கல்லால் அடித்துக்கொலை
தனது கணவரின் செயல்பாடு குறித்து ஸ்ரீதேவி தஞ்சாவூரில் உள்ள தனது அக்கா ரஞ்சனியிடம்(44) தெரிவித்தார். இதையடுத்து ரஞ்சனி நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அவரும், ஸ்ரீதேவியும் மாதவரத்தில் உள்ள சுஜியின் வீட்டுக்கு சென்றனர். இதையறிந்த ஜார்ஜ்கென்னடியும் அங்கே சென்றார்.
ஸ்ரீதேவியும், ரஞ்சனியும் ‘‘ஜார்ஜ்கென்னடியுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்துவிடு’’ என சுஜியிடம் கூறினார்கள். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த ஜார்ஜ்கென்னடி, ரஞ்சனியின் தலையில் கல்லால் அடித்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சனியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரஞ்சனி பரிதாபமாக இறந்தார்.
2 பேருக்கு வலைவீச்சு
இதற்கிடையே ஜார்ஜ்கென்னடியும், சுஜியும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கள்ளக் காதல் ஜோடியை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story