சென்டாக் முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்டாக் முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுச்சேரி,
சென்டாக் முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை செஞ்சிசாலையில் உள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.
தேசிய செயற்குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், துணை செயலாளர்கள் ராமமூர்த்தி, சலீம், பொருளாளர் அபிஷேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கைகள்கடந்த 3 ஆண்டு காலமாக நடைபெற்றுள்ள சென்டாக் முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சென்டாக் மூலம் அரசுக்கான இடம், சேர்க்கை, காலியாக உள்ளவை மற்றும் மாணவர் பெயர் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வாங்க மறுக்கும் கல்லூரிகளின் தடையில்லா சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உதவிகளை நிறுத்த வேண்டும்.
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடுகளுக்கு துணை போன ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் தவறு செய்தவர்கள் அனைவரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.