சேவை செய்யும் எண்ணத்தோடு வந்துள்ளேன்: கூச்சல்களை கண்டு கவலைப்படமாட்டேன் கவர்னர் கிரண்பெடி பதிலடி
சேவை செய்யும் எண்ணத்தோடு வந்துள்ளேன் என்றும் கூச்சல்களை கண்டு கவலைப்படமாட்டேன் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுத்துள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் நாராயணசாமிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த பிரச்சினை நேற்று முன்தினம் சட்டசபையில் வெடித்தது.
காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கிரண்பெடியை கடுமையான விமர்சித்தனர். அப்போது கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, கவர்னரை அமைச்சர்களின் அனுமதியின்றி அதிகாரிகள் சந்திக்கக்கூடாது என்றும், அவரை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்குள் விடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
கவர்னர் பதிலடிஇந்தநிலையில் முதல்–அமைச்சரின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:–
வெற்று கூச்சல்களை கண்டு நான் கவலைப்படப்போவதில்லை. எதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று எனக்கு நன்றாக புரிகிறது. நான் புதுவை மாநில மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன். புதுவை நலன் மீது அக்கறை கொள்வதை எப்போதும் உறுதி செய்வேன்.
இந்த பதவிக்கு நான் எல்லாவற்றையும் உணர்ந்துதான் வந்துள்ளேன். வெறும் பதவிக்காக வராமல் சேவை செய்யும் நோக்கத்தோடு பணியாற்ற நான் வந்துள்ளேன். பதவியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.
7 நாட்களும்...புதுவை மாநில மக்களுக்கு அனைத்து விதத்திலும் உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் நான் இருக்கவேண்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக கவர்னர் மாளிகையும், கவர்னர் மாளிகை குழுவும் இருக்கும். வாரத்தின் 7 நாட்களும் இதற்காக உழைப்போம். கவர்னர் மாளிகை என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.