பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை திறப்பு கைவிடப்பட்டது


பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை திறப்பு கைவிடப்பட்டது
x
தினத்தந்தி 7 Jun 2017 4:30 AM IST (Updated: 7 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை திறப்பு கைவிடப்பட்டது. கடைக்கு செல்லும் பாதையை மறித்து குழி தோண்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லால்குடி,

தமிழகத்தில் நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தமிழகத்தில் ஏராளமான மதுபான கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகளுக்கு மாற்றாக வேறு இடங்களில் கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக கடைகளை இடித்தும், மதுபான பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் லால்குடியை அடுத்த மாந்துறை நெருஞ்சலங்குடி பகுதியில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு இடம் கொடுத்த கட்டிட உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் லால்குடி தாசில்தார், கோட்டாட்சியர் ஆகியோரிடம் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருப்பி அனுப்பினர்

இந்நிலையில் இன்று(புதன்கிழமை) அதே கட்டிடத்தில் மதுபான கடை அமைக்க முடிவெடுத்து டாஸ்மாக் நிர்வாகத்தினர் நேற்று மாலை அந்த கட்டிடத்திற்கு மதுபான பாட்டில்களை அனுப்பி வைத்தனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த லால்குடி போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது. கடைக்கு சரக்குகள் கொண்டு வரப்பட்ட லாரி இறக்காமல் திருப்பி அனுப்பப்பட்டது. இதைதொடர்ந்து மீண்டும் கடை திறக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் அந்த கடைக்கு வாகனங்கள் வரும் பாதையில் குறுக்காக குழி தோண்டி தடை ஏற்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Related Tags :
Next Story