பெண் மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு: அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு தள்ளி வைப்பு


பெண் மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு: அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
x
தினத்தந்தி 7 Jun 2017 4:30 AM IST (Updated: 7 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கோர்ட்டு வளாகத்தில் திடீரென கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

சென்னையை அடுத்த படப்பை பகுதியில் பதுங்கி இருந்த மதுரையை சேர்ந்த ரீனாஜாய்ஸ்மேரி(வயது 32) என்ற பெண் மாவோயிஸ்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கரூர் வெங்கமேடு பகுதியில் கலா, சந்திரா ஆகிய இரு பெண் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கியூபிரிவு போலீசார் 2 பெண் மாவோயிஸ்டுகளையும் கடந்த ஆண்டு (2016) ஜூலை மாதம் 21-ந் தேதி கைது செய்து கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். பெண் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக இதே வழக்கில் வக்கீல் முருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தள்ளி வைப்பு

இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. பெண் மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா மற்றும் வக்கீல் முருகன் ஆகிய 3 பேரையும் திருச்சி சிறையில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் நேற்று காலை கரூர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். வேனில் இருந்து 2 பெண் மாவோயிஸ்டுகள் இறங்கிய போது மாட்டிறைச்சிக்கான தடை உத்தரவை நீக்க கோரி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

3 பேரையும் போலீசார் கோர்ட்டின் உள்ளே போலீசார் அழைத்து சென்று மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி நம்பிராஜன், அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் அதுவரை 3 பேருக்கும் காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

கோஷம்

வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது சந்திரா, கலா ஆகிய 2 பேரும் திடீரென கோஷம் எழுப்பினர். மத்திய, மாநில அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய், மாவோயிஸ்டு இயக்கம் வாழ்க என கோஷம் எழுப்பினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் திருச்சி சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.


Related Tags :
Next Story