செல்போன்கள் பறிமுதல் வழக்கு: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் கோர்ட்டில் ஆஜர்


செல்போன்கள் பறிமுதல் வழக்கு: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:30 AM IST (Updated: 7 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 செல்போன்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து 2 சிம்கார்டுகளும், ஒரு சார்ஜரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்கவும், உறவினர்கள் சந்தித்து பேசவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருகனை பார்ப்பதற்காக அவருடைய தாய் சோமணியம்மாள் இலங்கையில் இருந்து வேலூர் வந்தார். அவருக்கும், முருகனை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதை யடுத்து முருகனை கோர்ட்டிற்கு போலீசார் அழைத்து வரும் போது சோமணியம்மாள் கோர்ட்டிற்கு வந்து பார்த்து விட்டு சென்றார்.

வருகிற 20-ந் தேதி ஒத்திவைப்பு

இந்த நிலையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக, வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1-ல் கடந்த 25-ந் தேதி மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்னிலையில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு (நேற்று) மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார்.

அதன்படி, முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவேல் தலைமையிலான துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த காவலுடன் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

பகல் சுமார் 11.30 மணியளவில் மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்பு முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்தி வைத்தார். பின்னர் முருகனை வேனில் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.


Related Tags :
Next Story