புதிய டாஸ்மாக் திறப்புக்கு எதிராக சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


புதிய டாஸ்மாக் திறப்புக்கு எதிராக சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Jun 2017 3:45 AM IST (Updated: 7 Jun 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே, புதிய டாஸ்மாக் திறப்புக்கு எதிராக சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தாராபுரம்,

தாராபுரம் அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு திறப்புக்கு எதிராக சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புதிய டாஸ்மாக் கடை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலக்கடையில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சாலக்கடையை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது:– கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலக்கடையில் இருந்து வடபருத்தியூர் செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையடுத்து அங்குள்ள பொது நூலகம் அருகே தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் புதிய கட்டிடம் கட்டி டாஸ்மாக் கடை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரியிடம் மனு

தகவல் அறிந்ததும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். டாஸ்மாக் கடை அமைக்கும் பகுதியில் வழிபாட்டுத்தளங்கள், பொது நூலகம், நியாயவிலைக்கடை ஆகியவை இருப்பதால் பொது மக்களின் நடமாட்டம் எந்த நேரமும் இருக்கும். தவிர அந்த வழியாகத்தான் பெண்கள் தனியாக வேலைக்குச் சென்று வருகிறார்கள்.

தாராபுரம் சென்று பள்ளியில் படிக்கும் பெண்கள் திரும்ப வந்து, மாலை நேரங்களில் இந்த வழியாக தனியாக வீடுகளுக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறந்தால். பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துவிடும். பாலியல் தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாவார்கள் என்பதை சுட்டிக்காட்டி, டாஸ்மாக் கடை திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.

முற்றுகை

அதிகாரிகளின் பேச்சை நம்பி டாஸ்மாக் கடை திறக்கமாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையோடு இருந்து வந்தோம். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விட்டது. பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற பட்சத்தில் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்துவிட்டு, டாஸ்மாக் கடையை திறந்துள்ளனர். இதை கண்டித்து சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

பேச்சுவார்த்தை

எங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடாவிட்டால், இன்னும் ஓரிரு நாட்களில் தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்கள். தகவல் அறிந்த வருவாய்துறை அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது சப்–கலெக்டர் கிரேஸ்பச்சாவு இல்லாத காரணத்தால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story