எழுத்துகளை, எழுத்துருவாக்கும் ஸ்மார்ட்போன் ஸ்கேனர்


எழுத்துகளை, எழுத்துருவாக்கும் ஸ்மார்ட்போன் ஸ்கேனர்
x
தினத்தந்தி 7 Jun 2017 12:33 PM IST (Updated: 7 Jun 2017 12:33 PM IST)
t-max-icont-min-icon

எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய ஸ்கேனர் கருவிகள் மிகச்சிலவே உள்ளன. அவையும் அதிக எடை கொண்டதாகவும், சிறிய கோப்புகளை மட்டும் ஸ்கேன் செய்யக்கூடியதாகவும் உள்ளன.

 மொபைல் போன் அப்ளிகேசன்கள் சிலவும் ஸ்கேன் செய்ய உதவுகின்றன. ஆனாலும் அனைத்து கோப்புகளையும் ஒரு படமாகவே ஸ்கேன் செய்ய முடியும் வகையிலேயே இவை அறிமுகமாகி இருக்கின்றன. தெளிவும் தேவையான அளவுக்கு இருப்பதில்லை.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஸ்மார்ட்போன்களை ஸ்கேனர் கருவியாகவும், எத்தகைய கோப்புகளையும் எளிதில் ஸ்கேன் செய்யும் அப்ளிகேசனையும் உருவாக்கியுள்ளது அடோப் நிறுவனம். குறிப்பாக கையெழுத்து கோப்புகளையும் இதில் தேவையான அளவு துல்லியமான தெளிவில் ஸ்கேன் செய்ய முடியும். மிகப்பெரிய கோப்புகளையும் தெளிவாக ஸ்கேன் செய்ய முடியும்.

அத்துடன் கையெழுத்துகளை, கணினியில் பயன்படுத்தும் எழுத்துருக்களாக (பாண்ட்) உருமாற்றிக் கொள்ளக்கூடியது இந்த அப்ளிகேசன். இதனால் கையெழுத்தில் உருவான கோப்புகள், டைரி குறிப்புகள், புத்தக தகவல்கள் அனைத்தையும் இனி தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. உடனடியாக ஸ்கேன் செய்து எழுத்து கோப்புகளாக உருமாற்றம் செய்து பயன்படுத்த முடியும்.

படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம். அத்துடன் பலகோப்புகளை ஒன்றிணைத்து பி.டி.எப். கோப்பாக மாற்றி தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். ஆக, எல்லா வசதிகளும் கொண்ட இந்த சிறப்பு அப்ளிகேசன் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்களை ஸ்கேனர், பிரிண்டர், ஜெராக்ஸ் எந்திரம் என அனைத்துப் பயன்பாட்டிற்குமான கருவியாக மாற்றப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
‘அடோப் டாகுமென்ட் கிளவுட்’ என்பது இந்த அப்ளிகேசனின் பெயராகும். தற்போது சோதனை பயன்பாட்டிற்காக இலவசமாக பதிவிறக்கம் செய்து, பயன்படுத்திப் பார்த்து கருத்துகளை பதிவு செய்ய அனுமதித்துள்ளது அந்த நிறுவனம். விரைவில் பயன்பாட்டாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Next Story