நடைபாணி கணிப்பு பாதுகாப்பு யுத்தி


நடைபாணி கணிப்பு பாதுகாப்பு யுத்தி
x
தினத்தந்தி 7 Jun 2017 12:46 PM IST (Updated: 7 Jun 2017 12:46 PM IST)
t-max-icont-min-icon

பொது இடங்களில் குற்றச் சம்பவங்களை குறைக்க பல்வேறு பாதுகாப்பு நுட்பங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அதில் புதுமையாக, நடக்கும் பாணியை கணித்து பாதுகாப்பு வழங்கும் நுட்பம் ஒன்று பரிசோதிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொருவரின் நடையும், உடையும் பாணியும் தனித்துவமான அடையாளமாக விளங்குகிறது. இதை அடிப்படையாகக் கொண்டதே இந்த பாதுகாப்பு நுட்பம்.

உதாரணமாக ஒருவர் கைவீசி நடக்கும் விதம், தரையில், புல்தளத்தில், மெத்தை விரிப்பில் நடக்கும் தன்மை அவரது தனிப்பட்ட அடையாளமாக இருக்கும், இதைப் பயன்படுத்தி பொது இடங்களில் ஒருவரை இனம் காண உதவுகிறது இந்த தொழில்நுட்பம். நம்மைப்போல ஒருவர் பின்பற்றி நடக்க முயன்றாலும் அதன் வேறுபாட்டை எளிதில் கண்டுபிடித்துவிடும். கால்த் தடங்களையும் பதிவு செய்து அடையாளம் காணலாம்.

எதிர்காலத்தில் கைரேகை, கையொப்பம், ரகசிய சொற்கள் (பாஸ்வேர்டு) இவற்றுக்குப் பதிலாக புதுவித பாஸ்வேர்டு தொழில்நுட்பமாகவும் இதை பயன்படுத்தலாம். அத்துடன் இந்த தொழில்நுட்பத்தில் பொதுமக்கள் நடக்கும் சக்தியில் இருந்து மின்சாரம் பெற்று அவர்களது எலக்ட்ரானிக் கருவிகளுக்கு சார்ஜ் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிசிரோ (csiro) நிறுவனம் டேட்டா61 என்ற பெயரில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. பரிசோதனை முயற்சியில் 95 சதவீதம் துல்லியமாக மனிதர்களை அடையாளப்படுத்தியதாக கூறப்படுகிறது. “அணிந்து கொள்ளக்கூடிய எலக்ட்ரானிக் கருவிகள் இன்னும் பத்தாண்டுகளில் 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை பெற்றுவிடும். இத்தகைய காலத்தில் தங்கள் தொழில்நுட்பம் பேட்டரி சக்தி தேவையை ஈடு செய்வதுடன், பொது இடத்தில் பாதுகாப்பையும் அதிகப்படுத்தும். எலக்ட்ரானிக் கருவிகளின் பாதுகாப்பு நுட்பமாகவும் பங்களிப்பு செய்யும்” என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள்.


Next Story