உறக்கமின்மை மூளைச்சிதைவை ஏற்படுத்துகிறது!


உறக்கமின்மை மூளைச்சிதைவை ஏற்படுத்துகிறது!
x
தினத்தந்தி 7 Jun 2017 1:02 PM IST (Updated: 7 Jun 2017 1:02 PM IST)
t-max-icont-min-icon

‘நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று பாடினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

ஆனால் சராசரியாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு அவசியமான, சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரையிலான உறக்கம் இல்லாதவர்கள், தங்களின் மூளையை தாங்களே சிதைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

மேலும், ‘உறக்கம் என்பது நமக்கு புத்துணர்ச்சி ஊட்டி ஆற்றலை புதுப்பிக்கிறது’ என்றுதான் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ‘பகல் வேளையில் நிகழும் நரம்புகளின் செயல்பாடுகள் காரணமாக உற்பத்தியான நச்சுக் கழிவுகளை, நம் மூளையானது நாம் உறங்கும்போதுதான் சுத்தம் செய்கிறது’ என்கின்றன நரம்பியல் ஆய்வுகள்.

நச்சுக் கழிவுகளை சுத்தம் செய்யும் நரம்பியல் நிகழ்வானது வாரம் அல்லது மாதக்கணக்கில் போதிய உறக்கமே இல்லாமல் இருப்பவர்களின் மூளையிலும் நிகழ்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதன்மூலம் மூளைச் சிதைவு ஏற்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். அதுவும் மிக வேகமாக நிகழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, தொடர்ந்து மிகக்குறைவான நேரம் உறங்குபவர்களின் மூளையில், கணிசமான அளவு நரம்புகள் மற்றும் நரம்பு இணைப்புகள் (synaptic connections) ஆகியவை சிதைக்கப்படுகின்றன எனும் அதிர்ச்சிகரமான அறிவியல் உண்மை தெரியவந்துள்ளது.

இத்தாலியில் உள்ள மார்ஷே பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி மிஷெல் பெல்லேசி தலைமையிலான ஆய்வாளர்கள் மிக மோசமான உறக்கப் பழக்கம் காரணமாக பாலூட்டிகளின் மூளையில் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ‘மிகக்குறைவான உறக்கம் மூளைச் சிதைவை ஏற்படுத்துகிறது’ என்பது எலிகள் மீதான ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடலில் உள்ள பிற பகுதிகளைப் போலவே மூளையிலும் வயதான அல்லது செயலிழந்துபோன உயிரணுக்களை நீக்கும் உயிரணு சீரமைப்பு நிகழ்கிறது. இந்தப் பணியை இரண்டு வகையான கிளியல் உயிரணுக்கள் (glial cell) மேற்கொள்கின்றன. இவற்றில் மைக்ரோ கிளியல் உயிரணுக்கள்
(microglial cells)
என்பவை பாகோ சைட்டோசிஸ் (phagocytosis) எனப்படும் உயிரணு விழுங்கும் செயல்பாடு மூலமாக வயதான மற்றும் செயலிழந்த உயிரணுக்களை நீக்குகின்றன.

மறுபுறம், ஆஸ்ட்ரோ சைட்கள் (astrocytes) எனப்படும் இரண்டாம் வகை கிளியல் உயிரணுக்கள் மூளையில் உள்ள தேவையில்லாத நரம்பு இணைப்புகளை நீக்கி மூளையின் நரம்பியல் அமைப்பை மறு சீரமைப்பு செய்கிறது. இந்த நிகழ்வானது ஆரோக்கியமான மனிதர்கள் உறங்கும்போது அவர்களுடைய மூளையில் நிகழும் என்பது முன்பே தெரிந்த செய்தி. ஆனால், இதே சீரமைப்பு நிகழ்வானது தொடர்ச்சியாக உறக்கம் இல்லாதவர்களின் மூளையிலும் நிகழ்கிறது.

ஆனால், எதிர்பாராத விதமாக, உறக்கமின்மையால் தூண்டப்படும் இந்த நிகழ்வு காரணமாக, தேவையான அல்லது தேவையற்ற நரம்புகள் மற்றும் நரம்பு இணைப்புகள் என்ற பாகுபாடு இல்லாமல், அவசியமான பல நரம்புகள் மற்றும் நரம்பு இணைப்புகள் ஆகியவை சிதைக்க அல்லது அழிக்கப்படுகின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எளிமையாகச் சொன்னால், நீங்கள் உறங்கும்போது உங்கள் வீட்டிலுள்ள குப்பையை யாரோ சுத்தம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இது இயற்கையான நிகழ்வு. ஆனால் நீங்கள் உறங்கும்போது உங்கள் வீட்டிலுள்ள டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை யாரோ தூக்கி போட்டால் எப்படி இருக்கும். இதுதான் உறக்கம் இல்லாதவர்களின் மூளையிலும் நிகழ்கிறது.

இது தொடர்பாக கீழ்க்கண்ட முறையில் எலிகள் மீது ஆய்வுகள் நடத்தப்பட்டன.
1) 6 முதல் 8 மணி நேரம் தூங்கிய எலிகள், 2) உறங்கும்போது அடிக்கடி எழுப்பப்பட்ட எலிகள், 3) தினசரி 8 மணி நேரம் கூடுதலாக விழித்திருந்த எலிகள், 4) தொடர்ந்து 5 நாட்கள் விழித்திருக்க வைக்கப்பட்ட எலிகள்.

இவ்வாறு நான்கு வகையான எலிகள் மீது ஆய்வுகள் நடத்தப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக இதுபோல மனிதர்கள் மீதான ஆய்வுகள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் நாம் உறக்கம் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்று நம் மூளையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

Next Story