வேலூர் மாவட்டம் பொதுத்தேர்வில் சராசரி சதவீதத்தைகூட பெறமுடியவில்லை
அரசு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் சராசரி சதவீதத்தைகூட பெறமுடியவில்லை என்று கலெக்டர் ராமன் வேதனையுடன் தெரிவித்தார்.
வேலூர்,
அரசு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் சராசரி சதவீதத்தைகூட பெறமுடியவில்லை என்று கலெக்டர் ராமன் வேதனையுடன் தெரிவித்தார்.
பாடபுத்தகங்கள்கோடைவிடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ– மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள், சீருடைகள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ– மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துரைசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் கலந்துகொண்டு பாடபுத்தகங்கள், சீருடைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
சராசரி சதவீதத்தைகூட பெறமுடியவில்லைகோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு பழைய நண்பர்களை சந்திப்பதோடு அடுத்த வகுப்புக்கு செல்லும் ஆர்வத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும்போது இந்த ஆண்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், பெற்றோர்கள் பெருமைப்படும் வகையிலும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் வருகிறோம்.
ஆனால் 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் 31–வது இடத்திலேயே இருக்கிறோம். கடைசியில் இருந்து 2–வது இடத்தில் இருக்கிறோம். இதற்கு பதில் மேலிருந்து முதல் அல்லது இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு முயற்சி செய்யவேண்டும். நாம் சராசரி சதவீதத்தைகூட பெறமுடியாதநிலையில் இருக்கிறோம்.
100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும்இதில் கலெக்டருக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆசிரியர்கள் எவ்வாறு பாடங்களை போதிக்கவேண்டும் என்று பயிற்சியளிக்கப்பட்டது. அதனால் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போதாது.
இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என உறுதிமொழி எடுக்கவேண்டும். அதற்கு திட்டமிட்டு படிக்கவேண்டும். இன்று (நேற்று) பாடபுத்தகங்கள், சீருடைகள் உள்பட அனைத்தும் வழங்கப்படுகிறது. அதைபெற்று நீங்கள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலை கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வரன், தலைமை ஆசிரியர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.