டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில மாதங்களாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல், கடை முற்றுகையிடுதல் போன்ற போராட்டங்களை செய்து வந்தனர். அப்போது வருவாய்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பொதுமக்களை சமரசம் செய்து வந்தனர். கடந்த மாதம் 31–ந் தேதிக்குள் கடை அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும், வருவாய் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.