சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகள் நடவேண்டும் மாவட்ட நீதிபதி வேண்டுகோள்
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகள் நடவேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி கயல்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்,
உலக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம், மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு வாரத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சுத்தமான காற்றுஇதன்பின்னர் பொதுமக்களுக்கு மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும், தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் அபாயத்தையும், போதிய மழையில்லாமல் வறட்சி நிலவுவதையும் விளக்கி மரக்கன்றுகளை நட வேண்டுகோள் விடுத்து அவர் பேசியதாவது:–
மரங்களை அழிப்பதால் புவி வெப்பமயமாகி மழையில்லாமல் போனதுடன் வரும் காலங்களில் நாம் சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுஉள்ளதால் இயற்கையை பேணிக்காத்து சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் மரங்களை வளர்க்க உறுதி கொண்டு அதனை வாழ்நாள் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகள் நடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர், மரக்கன்றை நட்டுவைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார், சார்பு நீதிபதிகள் ப்ரீத்தா, சொர்ணகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் அழகுபாலகிருஷ்ணன், செயலாளர் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.