பசுவதை தடுப்பில் மத்திய அரசின் அரசாணை அரசியல் சாசனத்திற்கு எதிரானது சித்தராமையா பேச்சு
மாநில அரசின் அதிகாரத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்றும், பசுவதை தடுப்பில் மத்திய அரசின் அரசாணை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
மாநில அரசின் அதிகாரத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்றும், பசுவதை தடுப்பில் மத்திய அரசின் அரசாணை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் சித்தராமையா கூறினார்.
அரசியல் சாசனத்திற்கு எதிரானதுகர்நாடக இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:–
பசுவதை தடுப்பு விவகாரம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது. மேலும் மத்திய அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பது எனது உரிமை. அரசியல் சாசனத்தில் இதுபற்றி மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜனதா மதவாத கட்சி. மத்திய பா.ஜனதா அரசு மறைமுக நோக்கத்தை வைத்துக்கொண்டு செயல்படுகிறது.
இளைஞர்களை திசை திருப்புகிறார்கள்மத்திய அரசு மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறது. முஸ்லிம்கள் மற்றும் ஆதிதிராவிடர்களை தவிர்த்துவிட்டு முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமா?. காங்கிரஸ் தான் உண்மையான மதசார்பற்ற கட்சி. அனைத்து சாதி, மதத்தினரையும் ஒருங்கிணைத்து செல்ல காங்கிரசால் மட்டுமே சாத்தியம். இது காங்கிரசின் கொள்கை ஆகும்.
பா.ஜனதாவினர் இளைஞர்களை திசை திருப்புகிறார்கள். இந்துத்துவம், ராமர் கோவில் கட்டுவது, பசுவதை தடுப்பு போன்ற மத உணர்வுகள் உள்ள விஷயங்களை தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்க பார்க்கிறார்கள். இதுபற்றி இளைஞர் காங்கிரசார் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நானும் இந்து மதத்தை சேர்ந்தவன்இளைஞர்கள், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், ராமமோகன்லோகியா ஆகியோரின் கொள்கைகளை ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் கொள்கையில் ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நானும் இந்து மதத்தை சேர்ந்தவன் தான். ஆனால் நான் பா.ஜனதாவின் இந்து அல்ல.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இந்த விழாவில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், கிருஷ்ண பைரேகவுடா, கே.ஜே.ஜார்ஜ், பிரியங்க் கார்கே, காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.