14 பள்ளி வாகனங்களை இயக்காமல் நிறுத்தம்: கண்டோன்மெண்ட் அலுவலகம் முன் பெற்றோர்கள் முற்றுகை


14 பள்ளி வாகனங்களை இயக்காமல் நிறுத்தம்: கண்டோன்மெண்ட் அலுவலகம் முன் பெற்றோர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Jun 2017 3:30 AM IST (Updated: 8 Jun 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

14 பள்ளி வாகனங்களை இயக்காமல் நிறுத்தம்: கண்டோன்மெண்ட் அலுவலகம் முன் பெற்றோர்கள் முற்றுகை

குன்னூர்,

இலவசமாக இயங்கி வந்த 14 பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகம் முன் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டோன்மெண்ட் பள்ளிகள்

குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தின் கீழ் இயங்கும், வண்டிச்சோலை தொடக்கப்பள்ளியில் கடந்த 2008–ம் ஆண்டு 38 மாணவர்கள் படித்து வந்தனர். வெலிங்டன் பகுதியில் இயங்கிய நடுநிலைப்பள்ளியிலும் குறைந்த அளவிலான மாணவர்களே படித்து வந்தனர். எனவே, கண்டோன்மெண்ட் வாரிய அதிகாரிகள் மற்றும் வாரிய கவுன்சிலர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அந்த 2 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த பள்ளிகளில் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

முற்றுகையிட்டனர்

இதற்காக 2011–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் வாரியம் ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியது. அந்த நிதி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, காலணி, சொட்டர் மற்றும் பள்ளி பஸ்களை இயக்க செலவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி முதல் பள்ளி வாகனங்களை இயக்க கண்டோன்மெண்ட் வாரியம் நிதி தர முடியாது என்று கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் வெலிங்டன் பகுதியில் உள்ள மாணவர்களின் பள்ளி படிப்பு பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறி நேற்று 300–க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வெலிங்டனில் உள்ள கண்டோன்மெண்ட் அலுவலக்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறியதாவது:– நாங்கள் அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்களாக உள்ளோம். நிர்வாகம் சுமார் 14 பள்ளி வேன்களை கடந்த 7 ஆண்டுகளாக அனுப்பி வந்தது. ஆனால் தற்போது திடீரென்று வாகன வசதியை ரத்து செய்துள்ளார்கள். இது எங்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. ஆகவே பள்ளி வேன்களை மீண்டும் இலவசமாக இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹாரிஷ்வர்மா மற்றும் போர்டு கவுன்சிலர்கள் துரைராஜ், சிவக்குமார், செபாஸ்டியன், முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஹாரிஷ்வர்மா கூறியதாவது:–

தற்காலிகமாக நிறுத்தம்

நிர்வாகம் சார்பில் 14 பள்ளி வாகனங்களை இலவசமாக இயக்கி வந்தோம். இதற்காக கண்டோன்மெண்ட் நிதியுடன், பூனாவிலுள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தும் நிதி பெறப்பட்டது. இந்த வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1½ கோடி வரை செலவாகிறது. இந்த நிலையில் எங்களது பூனா தலைமை அலுவலகத்தில் இருந்து, ஏன்? இவ்வளவு செலவாகிறது என்று கேட்டதற்கு, பள்ளிக்குழந்தைகளின் நலனுக்காக நிதியை ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் பல முறை கடிதம் அனுப்பியும் நிதியை ஒதுக்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே வாகனங்களை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம்.

2 பஸ்களுக்கு அனுமதி

இது குறித்து பெற்றோர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளோம். இதற்கிடையில் பெற்றோர்களிடம் ரூ.500 கட்டணம் வாங்கினாலும் மாதத்திற்கு ரூ.10 லட்சம் பற்றாக்குறையாகத்தான் வரும் என்ற நிலை உள்ளது. இந்த சூழலில் மாணவ– மாணவிகளின் நலனுக்காக கண்டோண்மெண்ட் பகுதியில் இருக்கும் மாணவ மாணவிளுக்கு மட்டும் பயன் பெறும் வகையில் 2 பஸ்சிற்கு அனுமதி கேட்டுள்ளோம். மேலும் மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் பேசி பள்ளி நேரத்திற்கு பஸ் விட கோருதல், மாணவ மாணவிகளுக்கு பஸ் பாஸ் பெற்றுத்தருதல் போன்ற நடவடிக்கைளில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story