மதுக்கடையை மூடக்கோரி மிரட்டல் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை


மதுக்கடையை மூடக்கோரி மிரட்டல் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 7 Jun 2017 9:12 PM GMT)

எட்டிமரத்துபட்டியில் மதுக்கடையை மூடக்கோரி மிரட்டல் விடப்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடந்தது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எட்டிமரத்துபட்டியில் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த பகுதி வழியாக 50 குக்கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள மதுக்கடையை கடந்து செல்ல பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த மதுக்கடையை மூடக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று மனு அளித்தனர். அதன்பிறகும் இந்த மதுக்கடை மூடப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மதுக்கடைக்கு வந்த சிலர் கடையை மூடக்கோரி மேற்பார்வையாளருக்கு மிரட்டல் விடுத்தனர். கடையை மூடவில்லை என்றால் சூறையாடுவோம், என்றும் எச்சரித்தனர். இதுதொடர்பாக மேற்பார்வையாளர் முருகன் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து எட்டிமரத்துபட்டியில் உள்ள மதுக்கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் பாதுகாப்புடன் அங்கு மதுவிற்பனை நடக்கிறது.இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், எட்டிமரத்துபட்டியில் உள்ள மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கா விட்டால் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் அங்கு திரண்டு அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடும் வரை தொடர் தர்ணா போராட்டம் நடத்துவோம், என்று தெரிவித்தனர்.


Related Tags :
Next Story