கட்டுப்பாட்டை இழந்த காரால் 3 பஸ்கள், லாரி அடுத்தடுத்து மோதல் 21 பேர் காயம்


கட்டுப்பாட்டை இழந்த காரால் 3 பஸ்கள், லாரி அடுத்தடுத்து மோதல் 21 பேர் காயம்
x
தினத்தந்தி 7 Jun 2017 11:15 PM GMT (Updated: 7 Jun 2017 9:13 PM GMT)

துவரங்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த காரால் 3 பஸ்கள் மற்றும் லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் திருமண கோஷ்டியினர் உள்பட 21 பேர் காய மடைந்தனர்.

மணப்பாறை,

செங்கல்பட்டில் இருந்து மதுரை நோக்கி நேற்று மாலை சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த சேத்துப்பட்டி விளக்கு என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது மழையினால் திடீரென சாலையின் திருப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சென்று சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது.

திடீரென கார் அங்கும் இங்குமாக சாலையில் நிலைதடுமாறி சென்றதை அறிந்ததும் பின்னால் திருச்சியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற மணல் லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது லாரிக்கு பின்னால் திருச்சியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த திருப்பதி(வயது 17), சந்திரா(66),சுந்தரம்(70), மகாலெட்சுமி(40), ஜோதி மணி (34), முத்துச்சாமி(35), அழகர்(21), பிரசன்னா(5), ஜோதி (28) உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்சில் ஏற்றி மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான கார், பஸ், மணல் லாரி என 3 வாகனங்கள் சாலையில் நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமண கோஷ்டியினர் வந்த பஸ்

இதையடுத்து போக்கு வரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. அப்போது விபத்து நடந்த இடத்தின் அருகே நின்ற போலீசாரும் மற்றும் பொதுமக்களும் அந்த பஸ்சை நிறுத்தும்படி கூறினர். ஆனால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் சிறிது தூரம் சென்று நின்றது. அப்போது அரசு பஸ்சின் பின் பகுதியில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி திருமண கோஷ்டியினரை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் இரண்டு பஸ்களிலும் இருந்த 7 பேர் காயமடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து 3 பஸ்கள், லாரி, கார் என வாகனங்கள் மோதிக் கொண்டதால் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக பாதித்தது. இதைத் தொடர்ந்து போலீசார் - பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான பஸ்கள், லாரி, கார் ஆகிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து நடந்த பகுதியில் தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதாலும் நேற்று மழை பெய்ததாலும் வேகமாக வரும் வாகனங்கள் இதுபோன்று கட்டுப்பாட் டை இழந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.


Related Tags :
Next Story